பின்வரும் கவிதை, நூலகம் http://www.noolaham.org என்னும் வலைபதிவில் படித்தது, ஆசிரியர் : செழியன். என்னுடைய தலைப்பு: சுதந்திர தாகம்! என்னை கவர்ந்த நிஜம்!
****************************
இளமஞ்சள்
கருநீலம்
ஊதா
கூட்டமாக வண்ணத்துப் பூச்சிகள்
சிறகசைத்துச் சென்றன
மெல்லிய சிலிர்ப்பில்
பெண்ணின் கண்ணிமைக்குள்
நிகழும் படபடப்பு இவற்றுக்கு
தேன்பருக நினைத்ததோ
வழிதவறியதோ?
கன்னத்தில் மோதிச்சென்ற
வண்ணத்துப் பூச்சியைப் பார்த்து
கூச்சலிட்டு குதூகலித்தாள்
என் மகள்
குழந்தைகளுக்கு மட்டும்
பறக்கத் தெரிந்திருந்தால்
இந்த வண்ணத்துப் பூச்சிகளின்
இறக்கைகளுக்கிடையில்
தொலைந்து போயிருப்பாள்
வட்டமடித்து
எட்டமாயிருந்த செடியின்
பொன்நிற இலையில் அமர்ந்து ஓய்வெடுத்து
உலகை அளந்த வண்ணத்துப் பூச்சியை
கைகளில் பறித்து தரவேண்டினாள்
உயிர் இனங்களின்
உணர்வுகளைச் சொன்னேன்
சுதந்திரத்தைப் பற்றிப் போதித்தேன்
அடம் பிடித்தாள்
ஆசை மகள்
வானத்தில் பறவைகளை பறக்கவிட்டு
கடல்களில் மீன்களை நீந்தச் சொல்லி
நிலத்தில் மரங்களையும்
மரங்களில் பூக்கும் பூக்களின் மீது
வண்ணத்துப் பூச்சிகளையும் இருக்கவிட்டு
நிலத்திலும் வானத்திலும்
நிறுத்தப்பட்ட அழகையும் அமைதியையும்
மனிதர்களின் முகங்களில் பூசப்பட்ட
மகிழ்ச்சியையும்
எட்டுத் திசையிலும்
கொட்டிக் கிடக்கும் அற்புதத்தையும்
குரும்பட்டித் தேர் ஏறி
காற்றில் மிதந்து
பார்த்து வரலாமெனக் கூறினேன்
அதிசயத்துப் போனாள்
கட்டியணைத்து முத்தமிட்டாள்
கைகள் அசைத்து ஆர்ப்பரித்து
அம்மாவையும் அழைத்துச் செல்வோமென
எழுந்தாள்
அழகான பொய்
அழுதேன்
அழுதேன்
அழுதேன் நான்
மனதுக்குள்.
***********************************