Jul 30 2009

Ramayanam in Tamil - Part 2

மாளிகைக்குத்  திரும்பி வந்தான். சீதையினிடமிருந்து  தன்னை விடுவித்துக் கொள்ளும்  நெருக்கடியி்ல்  அவன் இருந்தான் . அவளோ இராமனுடைய  வருகையை  ஆவலோடு எதிர்பார்த்தாள்.
இராமன்  சீதையிடம்  நடந்தவற்றை  விவரித்தான். கண்கலங்கி  நின்ற அவளிடம் '' சீதை! நீதான்  என் தாய்க்கு ஆறுதலாக இருக்க வேண்டும்.அவர்களுக்குக் குறை ஏதும் பார்த்துக்  கொள்ள வேண்டும்"  என்றான்.

   இராமனை விட்டுப் பிரிந்திருப்பது  சீதைக்குச்  சாத்தியமில்லை. அப்படிப் பிரிந்திருப்பதைப் பற்றி  மனதால்  நினைக்கவும் அவளுக்கு முடியவில்லை.துடிதுடித்த  சீதை '' உங்களைப்  பிரிந்து  நான்  வாழ்வேனா? இப்படிப்  பேச எப்படி உள்ளம்  வந்தது?  என்னையும்  உங்களுடன்  அழைத்துச் செல்லுங்கள்"  என்று  புலம்பினாள்.

அன்பே! காடு மிகக்  கொடுமையானது. நிறைய ஆபத்து வரும். மென்மையான  உன்னால் அவற்றைத் தாங்க  முடியாது. இங்கேயே தங்கி இரு.நான் விரைவில்  திரும்பி  விடுகிறேன். " என்றான்  இராமன்.

   ''  உங்கள்  பிரிவை  விடக் காடு  கொடிய துன்பம் தருமா? என்ன துன்பம்  வந்தாலும்  தாங்கிக் கொள்வேன்.  என்னையும்  உங்களுடன் அழைத்துச்  செல்லுங்கள் " என்றாள்  சீதை.

       வேறு  வழி  இல்லாத அவன்  '' சரி! நீயும் வா" என்றான். இராமன்  நாடாளப் போவது இல்லை  காட்டிற்குச் செல்லப்  போகிறார் என்ற செய்தி  நாடெங்கும்  பரவியது. இதைக்  கேட்ட மக்கள்  எல்லோரும் கதறி  அழுதார்கள்.

      இப்படிப்பட்ட  கொடுமை நிகழலாமா? நாமும் இராமனுடன்  காட்டிற்குச் சென்று விடுவோம்.  இராமன்  இருக்கும்  இடமே நமக்கு  அயோத்தி என்று முடிவு செய்தார்கள்.

      இராமனும்  இலக்குவனும்  சீதையும்  அரசர் தசரதனிடம்  வந்தர்கள். அவரை  வணங்கினார்கள்.  அவர்களைக்  கண்டு  கண் கலங்கினார் அவர்.

     '' இவர்களைக் காட்டிற்குப்  போகச்  செல்லுங்கள் " என்று வற்புறுத்தினாள்  கைகேயி. ''என் கண்ணினும்  மேலானவனிடம் எப்படிச் சொல்வேன்" என்று அழுதார் அவர். கொடியவளான கைகேயி  அவர்களுக்கு அணிந்து கொள்ள  மரவுரி  தந்தாள் . மூவரும் மரவுரியை அணிந்து கொண்டார்கள்.

     அங்கு வந்த வசிஷ்டர். '' சீதை  மரவுரி அணிதல்  தகாது. பதினான்கு  ஆண்டுகளுக்குத் தேவையான ஆடை  அணிகலன்களைத்  தந்து அனுப்புங்கள் " என்று கைகேயியிடம்  கண்டிப்புடன்  சொன்னார்.

     அதிர்ச்சி அடைந்த தசரதன்.  'அன்பே! உனக்கு  யார் தீங்கு இழைத்தது? சொல். யாராக  இருந்தாலும்  கொன்று  ஒழிக்கிறேன்"  என்றார் சக்கரவர்த்தி.

     தலையை உயர்த்திய அவள் . ''யாரும் எனக்குத் தீங்கு இழைக்கவில்லை. முன்பு எனக்கு  இரண்டு வரங்கள்  தருவதாகச்  சொன்னீர்களே. அதை இப்பொழுது  தருவீர்களா? " என்று  அழுதபடியே  கேட்டாள்  கைகேயி.

     '' என் உயிர்  போன்றவன்  இராமன்.  அவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். என்ன  வரங்கள்  வேண்டும்?  கேள்.  தருகிறேன்"

     '' முதலாவதாக  இராமனுக்குப்  பதில்  பரதன்  இந்நாட்டின்  மன்னனாக  முடிசூடப்பட  வேண்டும்.  இரண்டாவதாக  இராமன்  பதினான்கு ஆண்டுகள்  காட்டிற்குச்  செல்ல  வேண்டும்.  இவையை  நான்  கேட்கும்  இரண்டு  வரங்கள் ஆகும்." என்றாள் கைகேயி.

      இதைக் கேட்ட  தசரதன்  இடி  தாக்கியது  போல  உணர்ந்தார்.  வேர்  அற்ற  மரம் போல  அப்படியே  மயங்கி  விழுந்தார்.

அதன் படியே சீதைக்கு ஆடை அணிகலன்கள்  தரப்பட்டன. பெரியவர்களை வணங்கிய இராமன் காட்டிற்கு  புறப்படத் தயாரானான். அவர்களுக்காகக்

காத்திருந்த  தேரில்  ஏறி  அமர்ந்தான். சீதையும் இலக்குவனும்  அவனுடன்  அமர்ந்தார்கள் .  சுமத்திரர்  தேரை  ஓட்டத் தொடங்கினார்.

    '' இராமா!  என்னை விட்டுப் போகிறாயா?" என்று  கதறினார்  தசரதன். அப்படியே  மயங்கி விழுந்தார். மகனைப் பின்  தொடர்வதா கணவனைக் கவனிப்பதா என்று கலங்கினாள்  கோசலை.

     நகர மக்கள்  அனைவரும்  அழுது  புலம்பியபடி  தேரைப் பின் தொடர்ந்தார்கள் . பொழுது சாய்ந்தது.  தேரை நிறுத்தினார் சுமத்திரர். கடல் போன்று மக்கள்  கூட்டம்  வருவதைக் கண்டான்  இராமன். எல்லோரும்  அங்கேயே  தங்கி  ஓய்வு  எடுத்தார்கள்.  நள்ளிரவு நேரம். எல்லோரும் நன்கு  உறங்கிக்  கொண்டிருந்தார்கள்.

    சுமத்திரரை  எழுப்பினான்  இராமன்.  மக்கள்  விழிப்பதற்கு  முன் நாம்  இங்கிருந்து சென்று  விடுவோம். என்னைத் தொடர்ந்து வந்து அவர்கள்  துன்பப்பட  வேண்டாம்" என்றான்.

   அதன்படி  சுமத்திரர்  தேரை ஓட்டினார். இராமனும் இலக்குவனும்  சீதையும்  அதில்  இருந்தார்கள். பொழுது விடிந்தது.  தேரைக் காணாத மக்கள்

இராமன் நாடு திரும்பி இருப்பார். நாமும்  நாடு திரும்புவோம். என்று நினைத்தார்கள்.எல்லோரும்  மகிழ்ச்சியுடன்  புறப்பட்டார்கள் . அன்று  முழுவதும்  அவர்கள் தேர் எங்கும்  நிற்காமல்  சென்றது. மாலை நேரம் கங்கைக் கரையை அடைந்தது. 

   எல்லோரும்  தேரில் இருந்து இறங்கினார்கள். அங்கிருந்த  பெரிய  மரத்தின்  நிழலில் அமர்ந்து ஓய்வு எடுத்தார்கள்.

குகனின் அன்பு

 இரதத்தை  அயோத்திக்குத்  திரும்பி  ஓட்டிச்  செல்லும்படி சுமந்திரனிடம்  இராமன்  தெரிவித்தான். ஆனால்  அந்தச்  சாரதியோ ரகுகுல திலகமாகிய  இராமனை விட்டுப் பிரிய  இயலாதவனாய்த்  தேம்பித் தேம்பி  அழுதான். இராமன்  அவனைத் தேற்றி  அவனை திருப்பி  அனுப்பி வைத்தான்.

   கங்கைக் கரையில்  வேடுவர்களின்  அரசனாகக்  குகன்  என்பவன்  இருந்தான். அவனுக்குச்  சொந்தமாக  ஆயிரம் படகுகள் இருந்தன. அவன் அனுமதி இன்றி யாரும்  கங்கை ஆற்றைக் கடக்க முடியாது.

   ஆட்சியைத்  துறந்த  இராமன்  வந்து  உள்ளார். என்பதை அறிந்தான். அவரைக் கண்டு வணங்க  ஆர்வத்துடன்  சென்றான். இராமனின்  திருவடிகளில்  தேனையும்   தினைமாவையும்  காணிக்கையாக  வைத்தான்.  பணிவுடன் வணங்கினான்.

   '' வேடுவ  அரசன் குகன்  நான். என் உயிர். அரசு அனைத்தும்  இனி உங்கள் உடையது. இங்கேயே நீங்கள் நிலையாகத் தங்கி இருக்கலாம். .உங்கள்  கட்டளை எதுவானாலும்  உடனே  நிறைவேற்றுவேன்" என்று உணர்ச்சி  பொங்கச்  சொன்னான்.

    அன்பில்  நெகிழ்ந்த  இராமன்  '' குகனே! இலக்குவனைப்  போன்று  நீயும்  என்  உடன்பிறந்தவன்  ஆவாய். உன்  வேண்டுகோளை  ஏற்க இயலாத  நிலையில்  உள்ளேன்.  துறவியைப்  போல வாழ்வதாக  வாக்குக் கொடுத்து உள்ளேன். கங்கையின்  அக்கரையில்  எங்களைச்  சேர்த்துவிடு"  என்றான்.

அறுசுவையுடன் ஆயித்தபடுத்தியிருந்த  உணவைக்  குகன்  வந்திருந்தவர்களுக்கு  வழங்கினான். ஆனால்  இராமனோ  ஊராரிடமிருந்து அப்படி  உணவு  ஏற்பதும்  தங்களுக்கு ஒவ்வாது என்று  பண்புடன் விளக்கினான்.

       கனி வகைகளை மட்டும் குகனிடமிருந்து அம்மூவரும்  பெற்று  உண்டனர். சிறிது  நேரத்தில்  அவர்களுக்கிடையே  அமைந்த  நட்போ  அசைக்க  முடியாதது.

     அடுத்த  நாள்  காலையில்  முறைப்படி  கங்கா ஸ்நானம். வழிபாடு   முதலிய  ஆசார அனுஷ்டானங்கள்  நிறைவேறின.  பிறகு  குகனுடைய

திறமை  வாய்ந்த ஆட்கள் படகைச் செலுத்தியதனால்  அவர்கள்  நதியைக்  கடந்து  சென்றனர்.  கங்கா தேவிக்குச் சீதாதேவி  வந்தனை வழிபாடுகளைச்  செலுத்தினாள். தாங்கள்  எடுத்துக் கொண்டிருந்த  விரதம்  இனிது  நிறைவேற  வேண்டுமென்றும்  அவள் வேண்டிக்  கொண்டாள்.

    நதியின்  தென்கரைக்கு  வந்தடைந்தான்  இராமன். கங்கையும்  யமுனையும்  கூடுகிற  இடத்தில்  வசித்து வந்த  பரத்வாஜ் மஹரிஷியைத்  தரிசிப்பது அவனுடைய  முதல்  திட்டமாக  இருந்தது.  யாத்திரைவாசி  ஒருவனிடத்து.  இருக்க வேண்டிய பக்தி  நிறைந்த  பாங்குடன்  இராமன் பரத்வாஜ ஆச்ரமத்திற்குப்  போய்ச்  சேர்ந்தான்.

    அயோத்தியில்  குற்றுயிர்  உற்றுக் கிடந்த  தசரதச் சக்கரவர்த்தியானவர்  தம்தைத்  தேற்றுதல்  பொருட்டு இராமன்  திரும்பி  வரக்கூடும்  என்று நினைத்துக்  கொண்டிருந்தார்.

   பின்பு  சோகத்தில்  திரும்பிய  சுமந்திரன்  தன்னந்தனியாக  திரும்பி  வந்து  கங்கை  நதிக்கரையில்  நிகழ்ந்தவைகளை எல்லாம்  தழதழத்த குரலிலே  தசரதனிடம்  எடுத்துரைத்தான்.

'' இராமா!  என்னை விட்டுப் போய் விட்டாயா?  இனி உன்னைக்  காண்பேனா?"  என்று  கதறினார். அவர் மூச்சு  நின்றது.

    துயரம் ஒருபுறம்  ஊரார் உள்ளங்களையெல்லாம்  உருக்கிக்  கொண்டிருந்தாலும் .  மகாமுனிவரும்  புரோகிதருமாகிய  வசிஷ்ட  மஹரிஷி  அடுத்தபடியாக நிகழவேண்டிய செயல்களில்  கருத்தைச்  செலுத்தினார்.

    '' அரசரின்  உடலைத்  தைலம்  பூசிப் பாதுகாத்து  வையுங்கள். கேகய  நாட்டிற்குச்  சென்று பரதனையும் சத்ருக்னனையும்  அழைத்து வாருங்கள். அரசர்  இறந்த  செய்தியைச்  சொல்ல வேண்டாம்" என்றார்.

      பரதனும் சத்ருக்கனனும்  நாடு திரும்பினார்கள். நாடே  சோகமாக  இருப்பதைக்  கண்டான்  பரதன் . பரபரப்பாக கைகேயியின் மாளிகைக்குள்

நுழைந்தான். அன்னையாரின்  முன்னிலையில்  இருவரும்  வீழ்ந்து  வணங்கினர்.

  கைகேயி  அவனை  வரவேற்றாள்.  '' அம்மா  இம்மண்டபத்தில்  தானே  என் தந்தையாரை  நான்  காண்பது  வழக்கம் !  அவர்  எங்கே" என்றான் பரதன்.

   தந்தை மடிந்து போன  செய்தியை  கைகேயி  சொல்லக் கேட்ட பரதன்  வேர்  அற்ற மரம்  போல  தரையில்  விழுந்து  குழந்தை  போல கதறிக்  கதறி  அழுதான்.

    தந்தை இறந்ததற்கான  காரணத்தை வினவினான்  தாயிடம் பரதன் . ''இராமா! என்னை  விட்டுப்  போய்  விட்டாயா?"  என்று  கதறினார். அவர் மூச்சு  நின்றுவிட்டது.

  '' தந்தை  இறக்கும்  போது அண்ணனும்  இல்லையா?  என்ன  தான் நடந்தது? எதையும்  மறைக்காமல்  சொல்லுங்கள்." என்றான் பரதன் . நடந்ததை  எல்லாம்  விளக்கமாகச்  சொன்னாள் அவள்.

'' ஐயோ! நான் என்ன செய்வேன்? என் தாய்  கொடிய  பாவம்  செய்து  விட்டாளே. என்னைப்  பெரும்  பழிக்கு ஆளாக்கி  விட்டாளே.  இந்தப் பழியை  எப்படிப்  போக்குவேன்" என்று அழுது புலம்பினான்.

   கடுங்கோபத்துடன்  தாயைப் பார்த்தான் . '' நீ  என்  தாயே  அல்ல. கொடிய  பகையாகவே  உன்னைக் கருதுகிறேன்  எண்ணனைக் காட்டிற்கு அனுப்ப எப்படி உனக்கு உள்ளம் வந்தது?

   அவர் மீது நான் உயிரையே  வைத்து  உள்ளேனே. அது உனக்குத் தெரியாதா. இரக்கமே  இல்லாமல்  என் தந்தையைக்  கொன்று விட்டாயே. பாவி!  உன் முகத்தில்  விழிப்பதும்  பாவம்" என்று கத்தினான்.

   அடுத்தபடியாகப்  பரதன்  தங்களுடைய ராஜ  குடும்பப்  புரோகிதராகிய வசிஷ்டரைச் சென்று  சந்தித்தான்.  காலம்  சென்ற  தந்தைக்குரிய ஈமச் சடங்குகளைச்  செய்து முடிப்பதற்கான  ஏற்பாடுகளையும்  விரைவில்  ஆயத்தப்படுத்தும்படி  அவரிடம் அவன்  வேண்டிக் கொண்டான். அதன்படியே  தசரதனின்  உடலுக்கு  வைதிக  முறைப்படி  தீ  மூட்டப்பட்டது.

    பின்பு பரதன்  கங்கைக்  கரைக்கு பயணிக்கும் எண்ணம்  கொண்டான்.  இராமன்  தான் இந்த  அரியாசனத்தில் அமர  வேண்டும்  என்பதில்  தீர்க்கமாக  இருந்தான்.

    எனவே  ஸ்ரீராமனுக்கு வனத்திலேயே  பட்டாபிஷேகம்  செய்வித்து  ராஜ  கோலத்துடன்  அவனைத்  திருப்பி அழைத்து  வருவது  அவர்களுடைய திட்டமாயிற்று.

ஆயிரம்   இராமனுக்கு  இணை

மக்கள்  வெள்ளம்  தொடர்ந்து  வர  பரதன்  புறப்பட்டான்.  கங்கைக் கரையை நோக்கி வரும் இந்த கூட்டத்தை முதலில் பார்த்தான் குகன். பெருங்கூட்டத்துடன் பரதன் இப்படிப் புறப்பட்டு  வருவதன்  கருத்து  யாதென்று  புரியாது குகன் ஐயம்  கொண்டான் . எனினும்  ஆராய்ந்து  பார்த்து  பரதன் தன் அண்ணன்  இராமனின்  கொண்ட பக்தியைக் கண்டு மெய்சிலிர்த்தான்.

    துறவுக் கோலத்தில் கண்ணீர் வழிய நின்ற  பரதனைக் கண்டான். பரதனைப் பார்த்து  உள்ளம்  நெகிழ்ந்தான்  அவன். ' ஆயிரம்  இராமர்கள்  உனக்கு இணையாக மாட்டார்கள்" என்று  பாராட்டினான்.

    அவனுடைய  உதவியால்  பரதனும்  மற்றவர்களும் கங்கை ஆற்றைக் கடந்தார்கள் . பரதன் பரத்வாஜ ஆச்ரமத்துக்குப் புறப்பட்டுச் சென்றான். தன்னோடு  வந்தவர்களைச்  சற்று எட்டத் தங்கியிருக்கும் படி செய்துவிட்டு  வசிஷ்டரும்  தானுமாகப்  பரத்வாஜ மஹரிஷியைச்  சென்று  சந்தித்தார்கள்.

 

    தாங்கள் புறப்பட்டு  வந்ததன்  நோக்கத்தைச் சுருக்கமாக  எடுத்துரைத்தார்கள்  மாமுனிவரிடம். இராமனுடைய  வாசஸ்தலத்தை  அம்மஹரிஷியிடமிருந்து  கேட்டுத் தெரிந்து  கொண்டார்கள் .  அதன் பிறகு இராமனைக் காணுதல்  பொருட்டு  அவர்கள்  கானகத்தின்  வழியாகத்  தென்திசை  நோக்கிச்  சென்றார்கள்.

   கலகலப்பு  ஏதுமில்லாத  இடமாகிய  சித்ரகூடத்தில் இராமனுடைய ஆத்ம சாதனங்கள்  அமைதியாகவும் ஆனந்தகரமாகவும் நடந்து  கொண்டிருந்தன. வழக்கம்  போல்  இலக்குவன்  தன்னுடைய நித்திய  கடமைகளில் ஈடுபட்டிருந்தான் . அப்பொழுது  படையெடுத்து  வருவதற்கு நிகரான  ஒரு  பெருங்கூட்டம்  வடதிசையில்  அவனுக்குத்  தென்பட்டது.  பரதனின்  பால் சந்தேகம் உற்றான் இலக்குவன். இதை  இராமனிடமும் கூறினான்.

இலக்க்ஷ்மணா.  அவசரப்படாதே. ஒருவேளை  பரதன் இங்கேயே  தங்கியிருந்து  எனக்குத் தொண்டுபுரிய முன்வந்தால் அவனுக்குப் பதிலாக நீ  அயோத்தி  சென்று  ஆட்சி  புரிய ஆயத்தமாகிறாயா?"  என்றான்  இராமன்.

    இலக்ஷ்மணன்  இப்பொழுது  வெட்கப்பட்டு  அமைதியாக நிற்கின்றான் . பரதனும்   சத்ருக்னனும்  கண்ணீரும்  கம்பலையுமாக  இராமனுடைய சந்நிதியில் வந்து  வீழ்ந்து  வணங்குகிறார்கள் .  பிறகு அவர்கள்  தேம்பித் தேம்பி  அழுகிறார்கள்.

    இலக்குவனோ  பரதனின்  மேன்மை கண்டு  வெட்கப்பட்டு  தலை  கவிழ்ந்தான். தான் புறப்பட்டு  வந்ததைச்  சுருக்கமாகச்  சொல்லிவிட்டுப் புத்திரர்கள்  யாரும் பக்கத்தில்  இல்லாத  நிலையில்  தந்தையார்  இறந்ததையும் விரிவாக எடுத்துரைத்தான்  பரதன் இராமனிடம்.

   சகோதரகள்  நால்வரும்  துயரத்தில்  மூழ்கினர். சகோதரர்கள்  நால்வரும்  சீதையும்  நதிகரைக்குச்   சென்று  இறந்து  போன  தந்தையாக சிரார்த்தச்  சடங்குகளை  முறையாக செய்து முடித்தனர்.

   தன்  எண்ணத்தை  இராமனிடம்  தெரிவித்தான்  பரதன் '' அண்ணா!  நீங்கள் மீண்டும்  அயோத்தி  வர வேண்டும்.  தந்தையின்  விருப்பப்படி அணிமுடி  சூட  வேண்டும். நாட்டை ஆள  வேண்டும்.  எங்கள் எல்லோருடைய  விருப்பமும் இதுதான்.  எங்கள்  வேண்டுகோளை  மறுக்காதீர்கள்"என்று  வேண்டினான்.

தம்பி!  தந்தையின்  கட்டளையை  நான் மீறமாட்டேன்.  பதினான்கு  ஆண்டுகள்  கழித்துக் தான் நாடு  திரும்புவேன். இது  உறுதி. நாடு  திரும்பி  நீ  அரசனாகி  ஆட்சி  நடத்து"  என்றான் இராமன்.

   '' நீங்கள்  இல்லாமல்  நாங்கள்  யாரும்  நாடு  திரும்ப  மாட்டோம். இங்கேயே  உங்களுடன்  தங்கி  விடுகிறோம்"  என்றான்  பரதன்.

    '' தம்பி  நான்  வாக்குத் தவற  மாட்டேன்.  என்னை  வற்புறுத்துவதால்  எந்தப்  பயனும்  இல்லை" என்று  உறுதியுடன்  சொன்னான் இராமன்.

      அங்கிருந்த  முனிவர்கள் '' பரதா!  இராமன்  சொற்களை ஏற்று  நட " என்றார்கள் . வேறு வழி இல்லை  என்பதை  உணர்ந்தான்  பரதன்.

     '' அண்ணா! உங்களுக்கு  உரிய  அரியணையில்  நான்  அமர  மாட்டேன் . ஆட்சி செய்ய  கட்டளை இட்டீர்கள்.  அதை  மீற   மாட்டேன். உங்களின்  பிரதிநிதியாக  இருந்து  ஆட்சி  செய்வேன்.

       உங்கள்  நினைவாகப்  பாதுகைகளைத்  தாருங்கள். உங்களுக்குப்  பதில்  அவையே  நாட்டை  ஆட்சி  செய்யும்.  குறிப்பிட்ட  காலத்திற்குள் நீங்கள்  வர வேண்டும்.  ஆட்சியை  ஏற்க வேண்டும். அப்படிச்  செய்யாவிட்டால்  உயிர்விடுவேன் நான் . இது உறுதி"  என்றான் பரதன்.

     தன் திருவடிகளில்  அணிந்து  இருந்த  பாதுகைகளை   கழற்றினான் இராமன். அந்தப்  பாதுகைகளை  வணங்கினான் பரதன்.  அவற்றைத்  தன்  தலையின் மேல்  சுமந்தான் . கண்களில்  கண்ணீர்  மல்க  அயோத்தி  திரும்பினான்.

      இராமனின்  பாதுகைகளை  அரியணையில்  வைத்தான்.  இராமனின்  பெயராலேயே  ஆளத்  தொடங்கினான்.

தலைநகருக்கு  வெளியே  சிறு  குடில்  அமைந்தான். துறவி  போல அங்கே தங்கி  இருந்தான்.  இராமன்  திரும்பும்  நாளை  எண்ணிக்  காலத்தைக்  கழித்து  வந்தான்.

   அங்கே  இராமனும்  இலக்குவனும்  சீதையும்  சித்திரக்கூடத்தை  விட்டுப் புறப்பட்டார்கள்.  அடர்ந்த  காட்டு  வழியே  சென்றார்கள்.  ஆங்காங்கே  இருந்த  முனிவர்களை  வணங்கி  வாழ்த்துக்களைப்  பெற்றார்கள்.

   தன் இருப்பிடம்  வந்த  அவர்களை  அகத்திய  முனிவர் வரவேற்றார்.  அங்கே சிறிது  காலம்  தங்கினார்கள்.  அவர்களைப்  பார்த்து அகத்தியர்

''  கோதாவரி  ஆற்றங்கரையில்  பஞ்சவடி  என்ற இடம்  உள்ளது. அங்கே  தங்குங்கள்"  என்று அறிவுரை சொன்னார். 

   அகஸ்தியமுனிவர் இட்ட  ஆணைக்குட்பட்டு  இராமன்  பஞ்சவடிக்குப்  போய்ச்  சேர்ந்தான்.  அதை  நேரில்  அவன்  பார்த்தபொழுது  முனிவர்  கொடுத்திருந்த  வர்ணனைகளுக்கு  மேலானதாகவே அது  அவனுக்குத்  தென்பட்டது. அதன்  சூழ்நிலை மிக கவர்ச்சியாக இருந்தது.  அங்கு  அமைந்திருந்த  மரம். செடி.  கொடிகளின்  வனப்பு  மனதை  கொள்ளை  கொண்டது.  இயற்கையின் வளம்  வர்ணனைக்கு எட்டாதிருந்தது. பறவைகளின்  மெல்லிய  ஓசைகள்  மனதை  தெய்வீகத்தில் ஆழ்த்தியது.

 அங்கே  அவர்கள்  குடில்  அமைத்தார்கள் . மகிழ்ச்சியாக  தங்கி  இருந்தார்கள்.

சூர்ப்பனகையின்  மோகம்

 

    ஆர்யவர்த்தத்துக்குத்  தென்பக்கம்  கடலுக்குள்  இலங்கை  என்னும் பெயர்  படைத்த தீவு  ஒள்று  இருக்கிறது.  அக்காலத்தில்  இராவணன்  என்பவன்  அத்தீவுக்கு  அரசனாக  இருந்து வந்தான் . அவனுடைய  ஆதிக்கம்  வடக்கே  தண்டக  ஆரண்யம்  வரை  பரவியிருந்தது.  அப்பகுதியில்

அவனுடைய  ஜனஸ்தானத்தில்  சேனை  ஒன்றை  அமைத்து  வைத்திருந்தான் . அவனுடைய  தாயாதிகளாகிய  கரன். தூஷணன்  என்னும்  இரண்டுபேர்  அந்தச் சேனைக்கு  அதிபதிகளாக  அமைந்திருந்தனர். சூர்பணகை என்னும்  மாது ஒருத்தி  அந்தச்  சேனாதிபதிகளின் தங்கையாவாள்.

 தண்டகாரண்யத்தில்  யாதொரு  தங்குதடையின்றித்  தாராளமாக  எல்லாப் பக்கங்களிலும்  அவள்  உலாவி  வருவாள். வயதில்  அவள் மூத்தவளாக இருந்தாள்.  பார்வைக்கு  அவள்  இலட்சணமானவள்  அல்ல.

   ஒரு  நாள்  காலையில்  அவள்  காட்டுக்குள்ளே  சுற்றி  வரும் போது  இராமனையும்  இலக்குவனையும்  சீதையையும்  பார்த்து  விடுகிறாள்.

இராமனின்  அழகில்  மயங்கி  விடுகிறாள்.  மாய மந்திரங்களில்  வல்லவளான அவள்  பேரழகியாக வடிவம்  எடுத்தாள்.  அழகுப்  பதுமை  போல  மெல்ல நடந்து  இராமனின்  அருகில் வந்தாள்.

  '' அன்பரே !  அரக்கர்களின்  அரசனான  இராவணனின்  தங்கை நான் . என் சகோதரர்களான  கரனும் தூடணனும்  இந்தப் பகுதியை  ஆளுகிறார்கள்.  உங்கள்  மீது  நான்  காதல்  கொண்டு விட்டேன் . நீங்கள் என்னைத் திருமணம் செய்து  கொள்ள வேண்டும் " என்று வேண்டினாள்.

    அவளோடு  கேலி  பேசி  விளையாட  நினைத்தான் இராமன்.  '' பெண்ணே! எனக்குத் திருமணமாகி   விட்டது.  அருகில் இருக்கிறாளே  இவள்

என் மனைவி.  பெயர் சீதை. இன்னொருத்தியை  நான் மணம் செய்து  கொள்ள முடியுமா?" என்றான் இராமன்.       '' அன்பரே!  ஆடவர்கள்  தங்கள்  உள்ளம்  கவர்ந்த  பலரைத் திருமணம் செய்து  கொள்ளலாம். " '' பெண்ணே!  நீயோ  அரக்கர்  குலம் நானோ மானிட  குலம்  நமக்குள்  திருமணமா?"

என்னை  மணந்தால்  அரக்கர்கள்  உங்கள்  உறவினர்கள்  ஆவார்கள்.  பிறகு  யாராலும்  உங்களை  எதிர்க்க  முடியாது."

   இப்படியே  இராமன்  அவளுடன் கேலியாகப் பேசிக்  கொண்டிருந்தான். இராமன் கேலி  செய்கிறான்  என்பதை  உணர்ந்தாள் அவள்.

   பேரழகி  ஒருத்தி  மனைவியாக  இருக்கிறாள். அதனால்  தான் இவன்  என்னை  மணக்க  மறுக்கிறான். அவளைக்  கொன்றால்  என் எண்ணம்  நிறைவேறும்  என்று  நினைத்தாள்.

    கொடியவளான  அவள் சீதையின் மீது  பாய்ந்தாள். அவளைக்  கொல்ல முயற்சி  செய்தாள்.  சீதை அலறினாள்.  அங்கிருந்த  இலக்குவன்  விரைந்து  செயல்பட்டான். சீதையை  விடுவித்த  அவன்  சூர்பனகையைப்  பிடித்தான். எத்தகைய  வேகத்துடன் சூர்பனகை  சீதையின்  மீது பாய்ந்தாளோ அதே  வேகத்துடன்  இளையவன்  இலக்குவன்  அரக்கியின்  மீது  பாய்ந்து  அவளுடைய  மூக்கையும்  காதுகளையும்  கொய்து தள்ளினான்.

    மூக்கையும்  காதுகளையும்  இழந்துவிட்ட அரக்கி  பெரும்  இரைச்சல்  போட்டாள் . அழுத வண்ணமாகத் தன்னுடைய  இருப்பிடத்திற்கு  அவள்  விரைந்து ஓடினாள்.  அவளுடைய  கீச்சுக்  குரலோ  கானகமெங்கும்  எதிரொலித்தது. அவள் தூரத்தில்  போவதற்கேற்ப  அவளுடைய  புலம்பலின்  ஓசை  படிப்படியாகப் பின்வாங்கிற்று.

    உடன்  விரைந்தாள்  அண்ணனிடம்  சூர்ப்பனகை. '' அண்ணா!  நீங்கள்  இங்கு  அரசர்களாக  இருக்கிறீர்கள்.  எனக்கு  இந்த நிலை வரலாமா" என்று  ஓலமிட்டாள். அவள்  அழுகுரலைக்  கேட்டு  கரனும்  தூடணனும்  அங்கு  வந்தார்கள்.

மூக்கு  அறுபட்டுக்  குருதி  வழிய நின்ற  சூர்பனகையைக்  கண்டார்கள்.  கோபத்தால் துடித்த அவர்கள் '' தங்கையே! உன்னை இந்த நிலைக்குஆளாக்கியவர்களைக்  கொன்று  ஒழிப்போம்" என்றார்கள்.

    அரக்கர்களின்  பெரும்படை  இராம  இலக்குவனனைச் சூழ்ந்து  கொண்டது. ஆராவாரம்  செய்தது. இதைப் பார்த்த  இராமன். '' இலக்குவனா!  சீதையைக்  கவனமாகப்  பார்த்துக் கொள். நான்  இந்தப் படையை  அழிக்கிறேன்" என்றான்.

    வில்லில்  அம்புகளைப்  பூட்டி  எய்தான். தலைமை  தாங்கிய  தூடணனின்  மார்பை  ஓர்  அம்பு துளைத்தது.  உயிர் துறந்தான்  அவன். இராமனின்  அம்பு  மழைக்குத் தாங்காமல்  அரக்கர்  படை ஓடியது.

     இதைப்  பார்த்து  கரன் கடுங்கோபம் கொண்டான். காடே அலறுமாறு  கர்ச்சனை  செய்தான். தன்  தேரை  இராமனை  நோக்கி  வேகமாகச்  செலுத்தினான். கூரிய அம்பு  ஒன்றால்  இராமனின்  வில்லை  உடைத்தான்.  இன்னொரு  அம்பால்  இராமனின்  கவசத்தைத் துளைத்தான். மேலும்பல  அம்புகளைத்  தொடர்ந்து  விட்டான்.

     அவன்  அம்புகளுக்கு  இராமன்  சிறிதும்  கலங்கவில்லை.  விரைவில்  இன்னொரு வில்லை எடுத்தான்.  கரன் மீது  குறி  வைத்து அம்பு எய்தான்.  கரன் இறந்து  விழுந்தான்.

    ராமபாணத்துக்கு  இரையாகாது  தப்பித்துக்  கொண்டவன்  ஒரே ஒருவன்  இருந்தான். அவன் பெயர் அகம்பனன். உயிர் தப்பிய அவன்  லங்காபுரிக்கு  விரைந்தோடினான். இராவணனுடைய  முன்  சென்றான். பிறகு அவனுக்கு  ஒரு  சந்தேகம்  உண்டாயிற்று. கெட்ட  செய்தியைச் சொன்னால்  இராவணன்  கெட்ட  செய்தியை  உரைத்தமையாக்காக  தம்மையும்  கொல்லக்  கூடும்  என்று  சிந்திக்கலானான் அகம்பனன்.

எனவே  அகம்பனன். ''வேந்தே. எனக்கு உயிர்பிச்சை கொடுங்கள். பிறகு  உங்களுக்குப் பிரதிகூலமான  செய்தி  ஒன்றைச்  சொல்கிறேன்" என்றான்.  இராவணனும்  அவன்  கொண்டு  வந்த  செய்தியைத்  தெரிவிக்குமாறு  அனுமதி  கொடுத்தான்.

 

 '' தண்டக  வனத்திலுள்ள  அரக்கர் கூட்டம்  அனைத்தும்  கொல்லப்பட்டது " என்றான்.

   '' யார்  இந்தச் செயலைச் செய்தது? என்று  கர்ஜித்தான் இராவணன்.  அதற்கு அகம்பனன்.  '' வேந்தே!  தசரத  குமாரனாகிய  இராமன். தன் தம்பி  இலக்ஷ்மணனோடும் . தேவலோகக்  கன்னிகை  போன்று திகழ்கின்ற  தன் மனைவி  சீதையோடும் பஞ்சவடி  என்னும்  இடத்தில்  முகாம் இட்டிருக்கிறான்.

    இந்த இராமன் தன்னந்தனியாக  நம்  அரக்கப்  போர்  வீரர்கள் பதினாலாயிரம்  பேர்களை மாய்த்துவிட்டான். அதுமட்டுமல்ல  கரன். தூஷணன்.

திரிசிரன்  ஆகிய சேனைத் தலைவர்கள்  மூவரையும் அவன்  சிதைத்துவிட்டான்.  நம் அரக்கர் படை முற்றிலும் அழிந்து விட்டது" என்றான்.

   '' அம்மூவரையும்  கொன்று  களைவேன் " என்று ஆவேசம் கொண்டு  எழுந்தான் இராவணன்.  சமயோசித  புத்தியுடைய அகம்பனன்  தன் மன்னனை  ஒருவழியாக சாந்தப்படுத்தினான். இராமனுடைய வீர தீரங்களை விவரமாக விளக்கினான் அகம்பனன்  இராவணனிடம்.

     மேலும்  இராமன் தன் மனைவி  சீதையின் மேல் அளவு  கடந்த  ஆசை வைத்துள்ளதையும். அவளை கவர்ந்து  வந்துவிட்டால்  இராமன் அவள் பிரிவை எண்ணி எண்ணி ஏங்குவான். சீதையின் அழகையும் இராவணனிடம் வியப்புறப் பாராட்டிச்  சொன்னான். அகம்பனன்.

கொடூரத்துக்கு  இருப்பிடமாகிய இராவணனிடத்துப் பெரிய குறைபாடு ஒன்று இருந்தது. அவன் காமநோய்க்கு  அடிமைபட்டவன்.  அக்குறையை அகம்பனன்  நன்கு பயன்படுத்திக் கொண்டான். இராவணனிடம்  காமநோய் அக்கணமே  தலைதூக்கியது. அதன் விளைவாக அகம்பனனுடைய  புத்திசாதுர்யத்தை  அவன்  பெரிதும் பாராட்டினான்.

     கரனையும் ஏனைய சேனைகளையும் இழந்தது இராவணனுக்கு  பெரிய நஷ்டமாகத் தோன்றவில்லை. ஓர் அழகிய மாதை  தனக்கு  மனைவியாக அபகரித்துக்  கொள்ள  அவன் முடிவுகட்டினான்.

    இலங்கையின்  வடபகுதியில்  மாரீசன் வாழ்ந்து வந்தான். அவன் இருக்கும் இடத்தை  நோக்கி  இராவணன்  வானத்தில்  பறந்து  செல்லும்  தன் விமானத்தைச் செலுத்தினான்.

   மாரீசனும்  மரியாதையுடன் தன் மன்னனை வரவேற்றான். இந்த மாரீசன்  விஸ்வாமித்திர முனிவருடைய யக்ஞத்துக்கு  கேடுகளை  விளைவித்தவன். அன்று  இளைஞ்ராயிருந்த இராமன் விடுத்த  பாணம்  இவனைத் தூக்கி  நடுக்கடலில்  வீசியது. அந்த ராமபாணத்தின் விளைவாக மாரீசன்  பெரிதும் மனம் திருந்தப்  பெற்றிருந்தான்.

 

    ஆயினும் தன் வேந்தனுடைய  வருகையை  முன்னிட்டு  அவனுக்கு வந்தனை வழிபாடுகள்  செலுத்த அவன்  கடமைப்பட்டிருந்தான்.  மாரீசனைத் தன்னுடைய  நெருங்கிய நண்பனாக  இராவணன்  கருதிவந்தான்.

     இராவணன் சீதையை  அபகரிக்கும்  தன் திட்டத்தை  விவரித்தான்  மாரீசனிடம். மாரீசனோ  இராமனின் வீரத்தை முற்றிலும்  அறிந்திருந்தான்.

 ஆதலால்  தனக்குத்தானே  அழிவைத்  தேடிக் கொள்ளும்  அத்திட்டத்தில்  ஈடுபட வேண்டாமென்று  அறிவுறுத்தினான் இராவணனிடம்.

வேந்தனும்  அவன் ஆலோசனைகளை பொருள் மிக நிறைந்ததெனக் கருதி அவன் புகட்டியவாறு அதை ஏற்றுக் கொண்டான். தன் தலைநகருக்குத்  திரும்பினான்.  இராவணன்.

   சில நாட்களில் அலங்கோலப்படுத்தப்பட்ட சூர்பனகை  இராவணனுடைய  சபா  மண்டபத்திலே  தோன்றி  தனக்கு நிகழ்ந்த  கொடுமைகளை பரிதாபத்துடன்  எடுத்து  வாரிக்  கொட்டினாள்.

   '' அண்ணா!  காட்டில்  இரண்டு  மானுடர்கள்  இருக்கிறார்கள்.  அவர்களின்  கொடுமைதான்  இது."

    '' அவர்கள்  ஏன் உன் மூக்கை  அறுத்தார்கள்?" உண்மையைத்  திரித்துச்  சொல்ல  வேண்டும்  என்று  நினைத்தாள்  அவள்.

பொன்  மான் ஓடியது

 '' அண்ணா!  காட்டில் இராமன். இலக்குவுன்  என்று  இரண்டு  மானுடர்கள்  இருக்கிறார்கள் . அவர்களுடன் சீதை என்ற பெண்ணும் இருக்கிறாள். அழகு என்றால் அவ்வளவு அழகு!  அவளைப்  போன்ற  பேரழகி மூவுலகங்களிலும் இல்லை.

   அந்தப்  பேரழகி  உமக்குப்  பொருத்தம்  என்று  நினைத்தேன். அவளை  இங்கே  தூக்கி  வர முயற்சி  செய்தேன்.

    அவர்கள் என் மூக்கை  அறுத்துவிட்டார்கள். உதவிக்கு வந்த  கரனையும்  தூடணனையும்  கொன்று விட்டார்கள்.  அண்ணா!  அவள்  நம் அந்தப்புரத்தில்  இருந்தால் போதும். அந்தப்புரமே அழகும் பெருமையும்  பெறும் என்றான்  சூர்பனகை.

தங்கைக்கு ஏற்பட்ட அவமானத்திற்குப் பழி வாங்க வேண்டும். அந்தப் பேரழகியை அடைய வேண்டும்.  என்ன செய்வது என்று  சிந்தித்தான்இராவணன்.

 காமத்தால்  தூண்டபெற்ற  இராவணன் மீண்டும் ஒருமுறை  மாரீசனுடைய  இப்பிடத்துக்கு  ஆகாய  விமானத்தில்  சென்றான். அவ்வளவு  விரைவில் வேந்தன்  மீண்டும்  வந்தது  மாரீசனுக்கு  வியப்பை அளித்தது.

 

   தன் சகோதரி சூர்பணகைக்கு  விளைந்த விபத்தை  இராவணன்  விரிவாக  எடுத்துரைத்தான் .              ''இப்பொழுது   நான்   ஒரு நெருக்கடியில்  அகப்பட்டுள்ளேன்.  என் சகோதரி அலங்கோலப்படுத்தப்பட்டிருக்கிறாள்.  மேலும்  என்னுடைய  மூன்று  சகோதரர்களை  அவன் மாய்த்துத் தள்ளிவிட்டான். என் சேனை வீரர்களையும் அவன்  கொன்று  குவித்துவிட்டான்.

   இங்ஙனம்  வரம்பு  கடந்து  நடந்து  கொண்ட  இராமனை  இராஜகுமாரன் என்றே  சொல்ல முடியாது. என்  இனத்துக்கும்  என் தங்கைக்கும்  இவன்  செய்திருக்கிற  தீங்குக்குப்  பரிகாரமாக  அவன்  மனைவி  சீதையை நான் அபகரித்துக் கொள்ளப்  போவதாக  நான்  தீர்மானம் எடுத்துவிட்டேன். அதற்கு  நீ தான்  எனக்கு உதவி  புரிய வேண்டும்" என்றான் இராவணன்.

 வேண்டுகோளையும்  இராவணன்  சொல்லலானான்: '' வெள்ளிப்  புள்ளிகளுடைய தங்கமான்  வடிவத்தை நீ  எடுக்க  வேண்டும். அக்கவர்ச்சிகரமான

வடிவத்தைப் பூண்டு  கொண்டு சீதையின்  முன்னிலையிலேயே நீ இங்கும்  அங்கும் துள்ளிக் குதித்து விளையாடி கொண்டிருக்கவேண்டும்.நூதனமான அந்தமானைப்  பிடித்துத் தரும்படி சீதை  இராமனிடம்  வேண்டுவாள். சகோதரர்களிருவரையும் நெடுந்தூரத்திற்கப்பால்  இழுத்துச்  செல்லுகிற உதவியை  மட்டும்  நீ செய்ய  வேண்டும் . அச்சமயத்தில்  தன்னந்தனியாக இருக்கிற  சீதையை நான் தூக்கிக் கொண்டு போய்விடுவேன். மனைவியைப்  பறிகொடுத்த  இராமன்  புலம்பி  நொந்து போவான்."

(46)(pagje)  மாரீசனுக்கு மனக்குழப்பம்  வந்தது. தன்னை  தைரியப்படுத்திக்  கொண்டு மீண்டும்  இராமனைப்  பற்றி  கூறலானான்:  ' வேந்தே!  இராமன் வீரத்தின்  பிறப்பிடம். அவன் அறம் காப்பவன் . தந்தை  சொற்படி  நடப்பவன். தன் தந்தை  கொடுத்த சத்தியத்தை  காப்பாற்றும் பொருட்டு ராஜ்யத்தைத் துறந்து வனவாசம்  வந்தவன். அவனுடைய  விரோதத்தை  வரவழைத்துக் கொள்வதன்  மூலமாக  உம்முடைய அழிவுக்கும்  உம் இனத்தவர் அழிவுக்கும்  தாம்  அடிகோலுகின்றீர்.

  உம்முடைய  அழிவுக்கென்றே சீதை பிறப்பெடுத்து வந்திருக்கின்றாள் என்று தோன்றுகிறது. அவள்மீது தாம்  காதல்  கொள்வது உங்கள்  அழிவுக்கே. இத்திட்டத்தில்  என்னையும்  இணைத்தால் என் உயிருக்கும்  ஆபத்து.  எனவே  இத்திட்டத்தை  விடுவது எல்லொருக்கும் நல்லது."

 இப்பொழுது  இராவணன் கடுஞ்சினத்துடன் '' உன்னுடைய  அறிவுரையைக் கேட்க  இப்பொழுது நான் இங்கு  வரவில்லை. நான் தீர்மானம் எடுத்து

விட்டேன். சீதையை  கவர்ந்து இராமனை பழிவாங்குவேன். உன்னுடைய  மன்னன்  என்கிற  முறையில்  நான்  உனக்கு ஆணையிடுகிறேன். நீ தங்க மானின்  வடிவெடுத்து இராமனை ஏமாற்றி  அப்பால் கவர்ந்திழுத்துச்  செல்லக்  கடமைப்பட்டிருக்கிறாய்.  உனக்கு  இடப்பட்டுள்ள ஆணையை நீ    மீறினால் நான் உன்னைக்  கொன்றுவிடுவேன்." என்றான்.

   மாரீசன்  தனக்குள்ளேயே  எண்ணிப்  பார்த்துக்  கொண்டான். '' இப்பொழுது  நான்  மரணத்தின்  வாசலில்  இருக்கிறேன். இராவணனோ அல்லது

 இராமனோ என்னைக் கொல்லப்  போகிறான். சாவது  உறுதி  என்றபின் இராமனுடைய அம்புக்கு இலக்காகி நான் அழிந்துபட்டுப்போகிறேன். ராமபாணம் என்னை  உயர்நிலைக்கு எடுத்துச்  செல்வது  உறுதி."

உத்தரவுக்கு  இசைந்தான் மாரீசன். அது இராவணனுக்குப் பெரும்  மகிழிச்சியை தந்தது. பின் இருவரும் வானத்தில்  பறக்கும் விமானத்தில் ஏறிக்

கொண்டு இராமனுடைய ஆஸ்ரமத்தை நோக்கிப் பறந்து சென்றனர். இராமனுடைய  ஆஸ்ரமத்தின்  அக்கம்  பக்கங்களில்  கூட்டம்  கூட்டமாக வந்துமான்கள்  மேய்வதுண்டு.

  அந்த காலைப் பொழுதில் பூந்தோட்டத்தில் சீதை புஷ்பங்கள் பறித்துக்  கொண்டிருந்தாள். அப்பொழுது அங்கே  பொன்மானைப்  பார்த்தாள். சீதை  அதைப் பார்க்க இராமனைக்  கூப்பிட்டாள் சீதை.

   புல்லையும் தளிர்களையும் கடித்தெடுத்ததில்  புதுமை  ஒன்று புலப்பட்டது. துள்ளிக் குதித்து இங்குமங்கும் அது ஓடியதில்  நாட்டியக்கலை நிறைந்திருந்தது.

   காண்பதற்கு அழகாக இருந்த அந்த மானை  கட்டிப்பிடிக்க  வேண்டும்.  பிறகு அதைத்  தங்களுக்குச்  சொந்தமாக்க  வேண்டும் .  என்று அவர்களிருவரும்  ஒருமனகாகத் தீர்மானித்தனர். 

   '' அண்ணா! இந்த மாய  வித்தையை  நடத்துபவன்  மாரீசன்  என்பதை  உங்களுக்கு  நினைவூட்டுகிறேன்"  என்றான்  இலக்குவன்.

     ஆனால் தம்பதியர்  இருவரும்  இதற்குச்  செவி  சாய்க்கவில்லை.'' துரத்திச்  சென்று  முடிந்தால் இந்த மானை உயிருடன்  பிடியுங்கள்" என்று சீதை தன் கணவனிடம் வேண்டினாள்.

லக்ஷ்மணா. சீதைக்கு காவல் இரு. ஏமாற்றுகிற இந்த மானை  நான்  ஒரு கை பார்த்துவிடுகிறேன் "  என்று பலத்த குரலில் கூறிவிட்டு இராமன் அதன்பின் ஓடினான்.

  பொன் மானைப் பின் தொடர்ந்து நெடுதூரம்  வந்துவிட்டான் இராமன். அவனது வனவாசக் குடிலினின்று  வெகுதூரம் அவனை  இழுத்து  வந்ததது  பொன் மான். தன்னை  மயக்கிய அந்த  மானைப்  பின் தொடர்ந்த  இராமன் ஓடிச் சலித்துப் போனான்.

  இலக்குப் பிசகாத அம்பு ஒன்றை  அவன் அந்த  மானின் மீது எய்தான்  இராமன். அக்கணமே அந்த  மான்  மாயமாக மறைந்து  போயிற்று. அதற்குப் பதிலாக  மாரீசன்  மாய்ந்து வீழ்ந்தான்.

 

   ஆனால் அவன் வீழ்வதற்கு முன்பே '' சீதா!   லக்ஷ்மணா!" என்று  வனமெங்கும்  எதிரொலிக்கும்படி  கத்தினான். இது இராமன்  கூச்சலிட்டது போலவே இருந்தது. இராமனுக்கு ஆபத்து நிகழ்ந்துவிட்டது என்றும்  உதவியை நாடி  அவன் கூக்குரலிட்டான்  என்றும்  கேட்டவர்கள்

யூகிப்பதற்கான  சூழ்ச்சியை வெற்றிகரமாக  அவன் கையாண்டான்.

  உதவியை  நாடி இராமன் கத்தியது ஆவலுடன் காத்திருந்த சீதையின் காதில் விழுந்தது. அக்கணமே  அவள் இரக்குவனை இராமனுக்கு உதவி  புரிய  போகச்  சொன்னாள். ஆனால்  இலக்குவனோ தன்  தமையனின்  ஆணைப்படி  அசையாது  அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

   கோபம்  கொண்ட சீதை . '' சுமித்திரையின்  மைந்தா! என்  கணவனின்  தோழன்  போன்று பாசாங்கு பண்ணிக் கொண்டு நீ வனத்துக்கு  வந்திருக்கிறாய். நீ ஏதோ கெட்ட எண்ணம்  கொண்டிருக்கிறாய். உன்  அண்ணன் செத்து ஒழிய வேண்டும் என்பது உன்னுடைய  நோக்கமா? என் மீதும் நீ ஏதாவது வழுவிய கருத்து  வைத்திருக்கிறாயா?" என்றாள்.

இலக்குவன் கைகளால் தன் காதுகளைப்  பொத்திக் கொண்டான். சாந்தமாக  அவன் சீதையிடம். ''அம்மா! அன்புகூர்ந்து  நான்  சொல்வதைக்  கேளுங்கள். இராமனை  எதிர்க்க வல்லவன் யாருமே இவ்வுலகில் இல்லை. பத்திரமாக  அவர் திரும்பி  வந்து சேர்வார்.

    நாம் கேட்ட குரல் என் அண்ணனுடைய குரல் அன்று. அது யாரோ அரக்கனுடைய சூழ்ச்சி.  உங்களுக்குக் காவல்  இருக்கும்படி  எனக்கு  ஆணைப்  பிறப்பித்துள்ளார்  அண்ணன்.  எனவே  அதை மீற முடியாது."  என்றான் இலக்குவன்.

    சீதைக்கு  மேலும் சினமும்  சோகமும் வந்தது. '' இராமன் அங்கு அழிந்துப்பட்டுப் போய் கொண்டிருக்கிறார். அவர் ஆணைபடி நீ இங்கே  காத்திருப்பேன் என்கிறாய். அவருடைய  அழிவுக்காகத் தான்  நீ  இங்கே காத்திருக்கிறாய். அவர் அழிந்துபட்டுப்  போன பிறகு என்னை உனக்கு உரியவள் ஆக்கிக் கொள்வது உன் திட்டம். அந்த எண்ணம் நிறைவேறாது.

    இராமனுக்கு  உதவி செய்ய  இப்பொழுதே விரைந்து செல் நீ அப்படி  செய்யாவிட்டால் இராமன் அழிவதற்கு முன்பே நான்  கோதாவரிக்குள் குதித்து என்னை  மாய்த்துக்  கொள்வேன்" என்றாள் சீதை.

    இலக்குவன் உதவி  '' தாயே . நான் குற்றம் அறியாக்  குழந்தை  என்று சத்தியம்  பண்ணுகிறேன். நான் என் தமையனுடைய ஆணையை  மீறி

நடக்கவும். தங்களுடைய  ஆணைக்கு அடிபணிந்து  நடக்கவும்   துணிகிறேன்.  தாங்கள்  ஆபத்து ஏதுமின்றி இருப்பீர்களாக." என்றான் இலக்குவன்.

   மாய மானைத் துரத்திக் கொண்டு இராமன் எந்தத் திசையில்  ஓடினானோ  அதே திசையில்  விரைந்தான்  இலக்குவன்.

 

கபடத் துறவி

 இலக்குவன்  சீதையைத் தனியாக குடிலில் விட்டு  உடன் விரைந்தான்  இராமனைத்  தேடிஇலக்குவன்  சென்ற  மாத்திரத்திலே  இராவணன் துறவிக்

கோலத்தில்  பஞ்சவடியை  அடைந்தான். தன்  திட்டப்படி எல்லாம்  நடக்கிறது என்பதை  உணர்ந்தான்  இராவணன்.

     சீதை இருந்த குடிலுக்கு வெளியே  நின்றான்  இராவணன். ''அம்மா! இந்த துறவிக்கு உணவு தாருங்கள் " என்று குரல்  கொடுத்தான். சீதை அவனுடைய பக்திப் பூர்வமான  உருவத்தைப் பார்த்து  அவனை  வரவேற்றாள். உணவுடன்  வந்தாள். சீதை. அவளை அருகில் பார்த்தான் இராவணன்.

   தங்கை  வருணித்ததை விட  பேரழகியாக  உள்ளாள்.  அவளை அடைந்தே  தீர வேண்டும் என்று  நினைத்தான்.

  சீதாப்பிராட்டியினுடைய  மேனியழகை  வந்தவன்  மிகைபட  வர்ணித்தான். அப்படிச்  செய்வது துறவி  ஒருவனுக்கு ஒவ்வாத  செயலாகும் . ஆயினும் குழந்தையின்  பாங்கு  படைத்திருந்த மாதரசி  அவனுடைய போக்கைப் பற்றிச்  சந்தேகப்படவில்லை.

   பின்பு '' பேரழகியே! இலங்கையின்  பேரரசன்  நான்.  என் பெயர் இராவணன். தேவர்களுக்கு அரசனான இந்திரனும்  என்னைக் கண்டால் நடுங்குவான். கைலை மலையையே தூக்கிய  வலிமை  உடையவன். நான்.

   என்னுடன்  அரியணையில்  அமர்ந்து பேரரசியாக வாழலாம். உன்னுடன் வந்த  மானுடர்களை  மறந்துவிடு. என்னுடன் வா" என்று  அவள்  கையைப் பிடித்து இழுத்தான்.  இராவணன் படைத்திருந்த  அசாதாரண  வல்லமைகளைப் பற்றியெல்லாம்  கேள்விபட்டு மெல்லிய  மேனி  படைத்திருந்த  மாதரசி  அச்சம்  சிறிதேனும்  பூணவில்லை.

இராவணனோ  விரும்பியவாறு  வெவ்வேறு  வடிவங்களை  எடுக்க  வல்லவனாயிருந்தான்.  இப்பொழுது  ஒரு பருத்த  இராக்ஷச  வடிவை  எடுத்தான்.  சீதையைத்  தூக்கி  தன்னுடைய  பறந்து  போகும்  புஷ்பக  விமானத்தில்  வைத்தான். அது  வானவெளியில்  பறந்து  போயிற்று அவளோ  கதறி அழுதாள். வேடனிடம்  சிக்கிய  மான்  போலத்  துடித்தாள்.

   அந்த வட்டாரத்தில் ஜடாயு என்னும் வயது  முதிர்ந்த  கழுகு ஒன்று ஒரு மரத்தில்  அமர்ந்து இருந்தது. முன்பு ஒரு  காலத்தில்  இந்த  ஜடாயு தசரதச்  சக்கரவர்த்திக்குத்  தோழனாயிருந்து  வந்தது. 

  சீதையின் அழுகுரலைக் கேட்ட  அது அவளைக்  காப்பாற்ற  நினைத்தது. விமானத்தின் அருகே பறந்து  சென்றது. இராவணனுடன் கடும்போர் செய்தது. தன் அலகினால் அவனைக்  கொத்தித்  துன்புறுத்தியது.

   கொடியவனான  அவன் அதன் இறக்கைகளை வெட்டி  வீழ்த்தினான். பறக்க முடியாது அது கீழே விழுந்தது. உடலெங்கும்  குருதி வழிய உயிருக்குப்  போராடிக் கொண்டிருந்தது.

   இலங்கையை  அடைந்தான்  இராவணன். தன் அரண்மனையையும்  செல்வ  வளத்தையும்  சீதையிடம்  காட்டினான். '' இங்கு  நீ  தேவர்களும்

போற்றப்  பேரரசியாக வாழலாம். என் ஆசைக்கு இணங்கு" என்று  இனிமையாகப் பேசினாள்.

  ''கொடியவனே! என்ன முயற்சி  செய்தாலும்  உன் எண்ணம்  நிறைவேறாது. என் கணவரின்  கையால் நீ  சாகப்போகிறாய். என்னை விட்டு விட்டால் உயிர் பிழைப்பாய் என்று சீறினாள்  அவள்.

கோபம் கொண்ட இராவணன்  ''நீ  என்னை விரும்பித்தான்  ஆக  வேண்டும். உன் உள்ளம்  மாற சிறிது காலம்  தருகிறேன்.  அதன்பிறகும் பிடிவாதமாக இருந்தால் உன்னைக்  கொன்று  விடுவேன் " என்றான்.

 

Add comment


(Will show your Gravatar icon)

  Country flag


  • Comment
  • Preview
Loading