Ramayanam is a master piece of Hindu tratidion & values. Lord Ram & Anuman lived as an example of how a good human being should be, they followed the unique values of Hindu Dharma. After watching recent episodes of Sri Ramayanam on SUN TV, I have requested my sister who is an housewife, to typewrite the Sri Ramayanam.
To make the online readers easier, I have tried to place the complete history in 4 parts. Hope you enjoy this & don’t forget to give thanks & comment.
1.இராமன் பிறந்தான்
2. வெற்றி மேல் வெற்றி
3.வில்லை வளைத்தால் திருமணம்
4. கூனி வந்தாள்
5. காட்டிற்கு செல்
6. மக்களின் துயரம்
7. குகனின் அன்பு
8. ஆயிரம் இராமனுக்கு இணை
9. சூர்பனகையின் மோகம்
10.பொன் மான் ஓடியது
11. கபடத் துறவி
12. சுக்ரீவனுடன் நட்பு
13. வாலி போருக்கு வா
14. அனுமன் புறப்பட்டான்
15. அசோக வனத்தில் சீதை
16. இராமனின் துதன்
17. விபீஷணன் அடைக்கலம்
18. அங்கதன் தூது
19. இன்று போய் நாளை வா
20. கும்பகர்ணன் போர்
21. இராவணனின் முடிவு
22. எங்கும் இன்பமே
23. இராமாயணக் கதாபாத்திரங்கள்
முன்னுரை
பூவுலகில் பண்பாடே வடிவெடுத்துள்ள இலக்கியங்களுள் இராமாயணம் தலைசிறந்ததாகத் திகழ்கிறது. இது உருவெடுத்து இந்தியாவில் எனினும் மானுட வர்க்கம் முழுவதின் மனதைக் கவரவல்லதாக இது இருக்கிறது. குழந்தை ஒன்று இராமாயணம் கேட்பதில் உற்சாகம் கொள்கிறது.
பாமரன் ஒருவன் இராமாயணம் கேட்டுப் பண்பாடு அடைகிறான். பண்டிதன் ஒருவரின் சிந்தனையை இது வளர்கிறது. ஆத்ம சாதகன் ஒருவனுக்கு இது அருள் கூட்டுகிறது . ஞானி ஒருவனுடைய ஞானத்தை இது உறுதிப்படுத்துகிறது . திரும்பத் திரும்பப் படிப்பதால்இராமாயணத்தில் யாருக்கும் சலிப்புத் தட்டுவதில்லை.
நீரினுள் மூழ்கி நீராடுவதால் மேனி தெளிவடைகிறது. அதே விதத்தில் இந்த இதிஹாச ஆராய்ச்சியால் மனது தெளிவடைகிறது. உணவு உடலைப் பேணுவது போன்று இந்நூல் அறிவை வளர்க்கிறது. பண்பாட்டை அடைய விரும்பியவர்களுக்கு வாழ்நாள் முழுதும் துணையாய் அமைந்திருப்பது இராமாயணம்.
அழிவற்ற இந்நூல் ஸ்ரீராமன் என்னும் மூர்த்தியை நடுநாயகமாகக் கொண்டுள்ளது . ஆகையினால் இது இராமாயணம் என்னும் பெயர் பெற்றிருக்கிறது . ராம சரிதம் என்பது இதன் பொருள்.
இளைஞர்களுக்கும் . முதியோர்களுக்கும். உலக வாழ்வில் ஈடுபட்டிருவர்களுக்கும் . ஆத்ம ஞானிகளுக்கும் ஸ்ரீராமன் முன்மாதிரியானவன்.அறநெறியே வடிவெடுத்தவன் ராமன் . எல்லாச் சந்தர்பங்களிலும் அறத்தைக் கடைப்பிடிப்பவனாக ராமன் இருந்திருக்கிறான்.
இராமனுக்கேற்ற கற்பு வாய்ந்த மனைவி சீதை. சீதை என்னும் சொல் படைச்சால் என்னும் பொருள்படுகிறது . இச்சிறுமிக்குப் பெற்றோர் இல்லை . பூமகளின் செல்வியாகப் படைச்சாலில் இவள் கண்டெடுக்கப்பட்டு ஜனகமகாராஜாவால் வளர்க்கப்பட்டாள். சீதை புனிதத்திற்கும் பெண்மைக்கும் உறைவிடமானவள் . சகிப்புத் தன்மையின் மூலம் அவள் துயரத்தை வென்றாள். பெண்ணின் பண்பாட்டின் சின்னமாக சீதை விளங்குகிறாள்.
நலம். கேடு ஆகிய இரண்டையும் இயற்கை உடைத்திருக்கிறது . இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள போராட்டம் எங்கும் வெளிப்படுகிறது. இராமாயணத்தில் நல்லவர்கள் ரிஷிகள் என்றும் கெட்டவர்கள் ராக்ஷசர்கள் என்றும் கூறப்படுகின்றனர்.
உலகைப் பற்றிய மற்றோர் உண்மை. தனக்கு எதிரியில்லாத ஜீவன் உலகில் இல்லை . எனவே எதிரியைச் சமாளிப்பது என்றும் வாழ்க்கைப் பிரச்சனையாக இருந்து வருகிறது. எதிரியைச் சமாளிப்பது வாழ்க்கைப் பயிற்சி ஆகும் . வலிமையுடையவன் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.
இராமாயணம் வலிமை பெறுவதற்கும். எதிரியைச் சமாளிப்பதற்கும் ஆன சக்தியை இராமாயணம் எல்லோர்க்கும் தருகிறது. ராமபாணம் வலிமைக்கும் நேர்மைக்கும் சின்னமாகிறது. அது ஒரு போதும் வீண் போவதில்லை.
அறநெறி காப்பவனுக்கு வாழ்க்கையில் சோதனைகள் அதிகம். அவைகளை முறையாகச் சமாளிப்பவன் வாழ்க்கையில் வெற்றியடைகிறான் . இது இராமாயணம் புகட்டும் பாடம் ஆகும். காமமும் . பொருள் ஆசையும் மனிதனைக் கெட்ட வழியில் செலுத்துகின்றன.
நீரினுள் மூழ்கி நீராடுவதால் மேனி தெளிவடைகிறது. அதே விதத்தில் இந்த இதிஹாச ஆராய்ச்சியால் மனது தெளிவடைகிறது. உணவு உடலைப் பேணுவது போன்று இந்நூல் அறிவை வளர்க்கிறது. பண்பாட்டை அடைய விரும்பியவர்களுக்கு வாழ்நாள் முழுதும் துணையாய் அமைந்திருப்பது இராமாயணம்.
அழிவற்ற இந்நூல் ஸ்ரீராமன் என்னும் மூர்த்தியை நடுநாயகமாகக் கொண்டுள்ளது . ஆகையினால் இது இராமாயணம் என்னும் பெயர் பெற்றிருக்கிறது . ராம சரிதம் என்பது இதன் பொருள்.
இளைஞர்களுக்கும் . முதியோர்களுக்கும். உலக வாழ்வில் ஈடுபட்டிருவர்களுக்கும் . ஆத்ம ஞானிகளுக்கும் ஸ்ரீராமன் முன்மாதிரியானவன்.அறநெறியே வடிவெடுத்தவன் ராமன் . எல்லாச் சந்தர்பங்களிலும் அறத்தைக் கடைப்பிடிப்பவனாக ராமன் இருந்திருக்கிறான்.
இராமனுக்கேற்ற கற்பு வாய்ந்த மனைவி சீதை. சீதை என்னும் சொல் படைச்சால் என்னும் பொருள்படுகிறது . இச்சிறுமிக்குப் பெற்றோர் இல்லை . பூமகளின் செல்வியாகப் படைச்சாலில் இவள் கண்டெடுக்கப்பட்டு ஜனகமகாராஜாவால் வளர்க்கப்பட்டாள். சீதை புனிதத்திற்கும் பெண்மைக்கும் உறைவிடமானவள் . சகிப்புத் தன்மையின் மூலம் அவள் துயரத்தை வென்றாள். பெண்ணின் பண்பாட்டின் சின்னமாக சீதை விளங்குகிறாள்.
நலம். கேடு ஆகிய இரண்டையும் இயற்கை உடைத்திருக்கிறது . இவ்விரண்டுக்கும் இடையிலுள்ள போராட்டம் எங்கும் வெளிப்படுகிறது. இராமாயணத்தில் நல்லவர்கள் ரிஷிகள் என்றும் கெட்டவர்கள் ராக்ஷசர்கள் என்றும் கூறப்படுகின்றனர்.
உலகைப் பற்றிய மற்றோர் உண்மை. தனக்கு எதிரியில்லாத ஜீவன் உலகில் இல்லை . எனவே எதிரியைச் சமாளிப்பது என்றும் வாழ்க்கைப் பிரச்சனையாக இருந்து வருகிறது. எதிரியைச் சமாளிப்பது வாழ்க்கைப் பயிற்சி ஆகும் . வலிமையுடையவன் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.
இராமாயணம் வலிமை பெறுவதற்கும். எதிரியைச் சமாளிப்பதற்கும் ஆன சக்தியை இராமாயணம் எல்லோர்க்கும் தருகிறது. ராமபாணம் வலிமைக்கும் நேர்மைக்கும் சின்னமாகிறது. அது ஒரு போதும் வீண் போவதில்லை.
அறநெறி காப்பவனுக்கு வாழ்க்கையில் சோதனைகள் அதிகம். அவைகளை முறையாகச் சமாளிப்பவன் வாழ்க்கையில் வெற்றியடைகிறான் . இது இராமாயணம் புகட்டும் பாடம் ஆகும். காமமும் . பொருள் ஆசையும் மனிதனைக் கெட்ட வழியில் செலுத்துகின்றன.
காமம் . பொருள் என இரண்டினுள் காமத்தை அடிப்படையாகக் கொண்டு இராமாயணம் உருவெடுக்கிறது. ஆயோத்யாபுரி. கிஷ்கிந்தை . இலங்கை ஆகிய மூன்றும் தலைநகரங்கள் .
அயோத்யாபுரியில் தசரத மன்னன் தனக்கு வாய்ந்த மனைவிமார் மூவிரிலும் கைகேயியினிடம் அளவுகடந்த அன்பு காட்டினான் . அதன் விளைவாகச் சிறிதளவு தீங்கு வடிவெடுத்தது. கிஷ்கிந்தையில் காமம் ஓரளவு அதிகரிக்கிறது. அதன் விளைவாக வாலியும் சுக்ரீவனும் சிறிது காலம் பிரிந்திருந்தார்கள்.
இலங்கையிலே இராவணன் காம நோய்க்கு முற்றிலும் வசப்பட்டு இருந்தான். அதன் விளைவாக இராவணனும் அவனைச் சார்ந்தவர்களும் அழிந்து போயினர்.
ஸ்ரீராமன் இந்து மூன்று இடங்களில் மூன்று விதமான முறைகளைக் கையாண்டு காமநோயைத் துடைக்கிறான். சமுதாயத்திலுள்ள தீங்குகள் பலவற்றிற்குக் காரணம் காமம். அவைகளை இராமாயணம் எடுத்துக்காட்டுகிறது.
காமத்தை வெல்வதைப் பொருத்து மனிதன் தெய்வநிலை எய்துகிறான் . இராமன் ஏகப்பத்தினி விரதம் கொண்டிருந்தான். இல்வாழ்க்கைக்குத் தேவையான தத்துவம் இதுவே ஆகும்.
காமத்தை வென்றவன் இராமன் . அவன் பெருமைகளைப் போற்றுவதோடு நீதிக் கருத்துக்களை அள்ளி வழங்கும் நூல் இராமாயணம் . இராம சேவையே தன் வாழ்நாள் பாக்கியமாகக் கருதிய அனுமன் பெருமைகளை உரைக்கும் நூல் இராமாயணம் . சகோதர உணர்வுகளின் குவியல் இந்த நூல். ராமாயணம்
இராமன் பிறந்தான்
காலச் சக்கரம் சதா சுழன்று கொண்டிருக்கிறது. அதில் கிருதயுகம் . திரேதாயுகம். துவாபரயுகம். கலியுகம் ஆகிய நான்கு யுகங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கின்றன.
இப்பொழுது நாம் கலியுகத்தில் வாழ்ந்து வருகிறோம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பண்டைக் காலத்தில் திரேதாயுகத்தில் இராமாயணம் நிகழ்வதாயிற்று.
புண்ணிய நதியாகிய கங்கா நதிக்கு வடக்கே கோசல ராஜ்யம் என்பது ஒன்று இருந்தது. கோசல ராஜ்யத்தை ஆண்டு வந்த அரசர்கள் எல்லாரும் சூரிய குலத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களுள் மனுச்சக்கரவர்த்தி . இக்ஷவாகு ரகு ஆகியவர்கள் குறிப்பிடதக்க தகைமை வாய்ந்திருந்தனர். கோசல ராஜ்யத்துக்கு அயோத்யா பட்டணம் தலைமை நகராகத் திகழ்ந்திருந்தது.
சூரிய குலத்து அரசர்களுள் தசரதச் சக்கரவர்த்தி . என்பவர் ஒருவர் இருந்தார். அவர் கீர்த்தி மிக வாய்க்கப் பெற்றவர் . அவர் நெடுங்காலம் செங்கோல் தாங்கி முறையாக நாட்டை ஆண்டு வந்தார்.
தசரதனுக்கு கைகேயி . கோசலை .சுமத்திரை என்று மூன்று மனைவியர் இருந்தனர். மனைவியர் மூவர் இருந்தும் அவருக்குக் குழந்தைள் இல்லை. குலம் தழைக்கக் குழந்தை இல்லையே என்று வருந்தினார் அவர். இக்குறையை அகற்றுவதற்கு ஏற்றதொரு வைதீகச் சடங்கைச் செய்வது பொருந்தும் என் அவருக்குத் தெரிந்தது
அப்பொழுது இலங்கையை இராவணன் என்றொரு அரக்கன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பத்துக் தலைகள் இருந்தன. பேராற்றலைப் பெறுவதற்காகப் பிரம்மனை எண்ணிக் கடுந்தவம் செய்தான். அவன் முன் பிரம்மன் தோன்றினார். கேட்ட வரங்களைத் தந்தார் .
மிகுந்த வலிமை பெற்ற அவன் தேவர்கள் மீது படை எடுத்தான் . அவனை எதிர்த்து நிற்க தேவர்களால் முடியவில்லை. தோற்றனர் இராவணனிடம். வெற்றிக் களிப்பில் தேவர்களைத் துன்புறுத்தத் தொடங்கினான். இராவணன் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் அழுது புலம்பினார்கள் . தங்களைக் காப்பாற்றக் கூடியவர் திருமாலே என்று அறிந்தார்கள்.
எல்லா தேவர்களும் ஒன்று சேர்ந்து திருப்பாற்கடலை அடைந்தார்கள் . பாம்புப் படுக்கையில் படுத்திருந்த திருமாலை வணங்கிணார்கள்.
'' முழுமதற் கடவுளே ! இராவணன் உள்ளிட்ட தீய அரக்கர்களால் மூவுலகும் துன்பப்படுகிறது. எங்கு வேள்வி நடந்தாலும் அதை அழிக்கிறார்கள். அவர்களின் கொடுமைகளை எங்களால் தாங்க முடியவில்லை . நீங்கள் தான் காப்பாற்றி அருள வேண்டும்" என்று வேண்டினார்கள் .
புன்முறுவல் பூத்தவராக ஹரி சிறிது நேரம் அமைதியுற்றிருந்தார் . பூலோகத்தில் தசரதச் சக்கரவர்த்தி புத்திரகாமேஷ்டி யக்ஞத்தை முறையாக நிறைவேற்றி வருவதால் நாராயணன் தாமே அந்தச் சக்கரவர்த்தியினுடைய நான்கு புதல்வர்களாக அவதரித்து பூலோகத்தில் இராவணனால் நிகழ்ந்து வரும் இன்னல்களை ஒழுங்குபடுத்துவாதாகவும் பகவான் உருதி கூறினார்.
இதைக் கேட்ட தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் . திருமாலை வணங்கி விட்டுப் புறப்பட்டார்கள்.
அங்கே தசரதன் அமைச்சர்களை அழைத்து குலம் தழைக்க தனக்கு மகன் பிறக்க வழி சொல்ல வினவினான் . அவர்கள் புத்திரகாமேஷ்டி யக்ஞம் செய்தால் பிள்ளை பிறக்கும் என்றனர்.
அந்த யாகத்தை முறையாக நிறைவேற்ற வல்லவராக ரிஷ்யசிருங்கர் என்னும் முனிவர் ஒருவர் இருந்தார் . அச்சான்றோரைச் செங்கோல் தாங்கிய மன்னர் பக்தி பூர்வமாக அணுகினார் . முனிவரும் மன்னனுடைய வேண்டுதலுக்கு மகிழ்வுடன் சம்மதம் கொடுத்தார்.
புத்திரகாமேஷ்டி யாகம் முனிவரின் முன்னிலையில் துவங்கியது. வேள்வித் தீயிலிருந்து தேவன் ஒருவன் வெளியே வந்தான். அவன் கையில் பொற்கிண்ணம் ஒன்று இருந்தது. அந்தக் கிண்ணத்தைக் தசரதனிடம் தந்துவிட்டு மறைந்தான்.
மகிழ்ந்த தசரதன் கிண்ணத்தில் இருந்த பாயாசத்தை மனைவியரிடம் தந்தார். அவர்களும் அதைப் பக்தியுடன் அருந்தினார்கள் . வேள்வியின் விளைவாக அவர்கள் மூவரும் கருவுற்றனர்.
கோசலை இராமனையும். கைகேயி பரதனையும் மகனாகப் பெற்றார்கள். சுமத்திரைக்கு இலக்குவன். சத்ருக்கனன் என்ற இரண்டு மகன்கள் பிறந்தனர்.
நான்கு மகன்கள் பிறந்ததை எண்ணிப் பெரிதும் மகிழ்ந்தார் தசரதன் . அயோத்தி மாநகரமே விழாக் கோலம் பூண்டது.இளவரசர்கள் நால்வரும் எந்தக் குறையும் இல்லாமல் வளர்ந்து வந்தார்கள் . இராமனுக்கு நெருக்கமாக இலக்குவன் இருந்தான், அதே போலப் பரதனுக்குச் சத்ருக்கனன் இருந்தான்.
முனிவர் வசிஷ்டரிடம் இளவரசர்கள் நால்வரும் கல்வி கற்றனர். நற்பண்புகள் அனைத்தும் நிறைந்தவர்களாக விளங்கினார்கள். படைக்கலப் பயிற்சிகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றார்கள். அவர்களில் தலை சிறந்தவனாக இராமன் விளங்கினான் . நற்பண்புகள் நிறைந்த அவன் பெரியவர்களை மதித்தான். எல்லோரிடமும் அன்பு காட்டினான். தன்னால் இயன்ற உதவிகளைப் பிறர்க்குச் செய்தான். எப்பொழுதும் பொறுமையும் பணிவும் உடையவனாக நடந்து கொண்டான்.
இதனால் எல்லோருடைய உள்ளங்களையும் அவன் கவர்ந்தான் . மூத்தவனான அவன் மீது தசரதன் உயிரையே வைத்திருந்தார்
வெற்றி மேல் வெற்றி
காலம் பல கடந்தது. தசரதச் சக்கரவர்த்தியும் அவருடைய மந்திரிப் பிரதானிகளும் அரசாங்க அலுவல்களை ஆர்வத்துடன் கவனித்து வந்தனர். அப்பொழுது ஏவலாள் ஒருவன் அலுவலகத்தினுள் பிரவேசிக்கிறான் . மாளிகையின் வாயிலை நோக்கி மாமுனிவர் விஸ்வாமித்திரர் வந்து நின்று கொண்டிருக்கிறார் என்ற செய்தியை அவன் தெரிவிக்கிறான்.
வாயிலுக்கு விரைந்தான் தசரதன். அவரை வணங்கி வரவேற்றான் தசரதன். அரசவையில் மெச்சத்தகுந்த இருக்கையில் அவரை அமர வைத்தார்.
'' மாமுனியே! தங்கள் வருகையால் இந்த நாடே பெருமை பெற்றது. தாங்கள் என் உயிரையே கேட்டாலும் தருவேன்" என்று வாக்குறுதி தந்தார்.
'' வேந்தே! வாக்குத் தந்தமைக்கு மிக்க நன்றி . அதை நிறைவேற்றி வைப்பதிலும் தாம் உறுதிப்பாடே வடிவெடுத்து இருப்பீராக.
நான் யாகம் ஒன்று நடத்தி வருகிறேன் . மாரீசன். சுபாகு என்னும் இரண்டு அரக்கர்கள் இரத்தத்தையும். மாமிசத்தையும் கொட்டி அந்த யாகத்தைப் பாழ்படுத்த உருதி பூண்டிருக்கின்றனர் .
செங்கோல் தாங்கிய செம்மலே ! உம்முடைய மூத்த செல்வனாகிய இராமன் ஒருவனுக்கு மட்டுமே இந்த அரக்கர்கள் இருவரையும் ஒழித்துத் தள்ளுவது சாத்தியமாகும். உன் அருமைச் செல்வனுக்குத் தீங்கு ஏதும் வராதபடி நான் பார்த்துக் கொள்கிறேன் ." என்றார் விசுவாமித்திரர்.
இதைக் கேட்ட தசரதன் ஸ்தம்பித்தான் . திக்கித் திக்கித் தடுமாறிப் பேசலானான். '' இராமனுக்குப் பதினாறு ஆண்டு இன்னும் பூர்த்தியாகவில்லை . இராக்ஷசர்களை எதிர்த்துப் போரிடும் அனுபவம் இந்த இளம் கன்றுக்கு இன்னும் வரவில்லை . உங்களுக்குத் துணையாக நான் வருகிறேன் . அந்த அரக்கர்களை நான் அழிக்கிறேன் " என்றார் தசரதன் .
''தசரதனே! உன் துணை எனக்கு வேண்டாம் . இராமன் யார் என்பது உனக்குத் தெரியாது. அவன் வலிமையையும் நீ அறிய மாட்டாய்.
என்னுடன் அவனை அனுப்ப முடியுமா ? முடியாதா?" என்று கண்களில் கோபச் சிவப்புடன் கேட்டார் அவர்.
உயிருக்கும் மேலான இராமனைப் பிரிவதா? முனிவரின் கோபத்திற்கு ஆளாவதா? என்ன செய்வது? என்று குழம்பினார் தசரதன் . குல குருவான வசிஷ்ட முனிவர். அரசே! விசுவாமித்ரருடன் இராமனை அனுப்பி வையுங்கள் . இராமனின் பெருமையை உலகமே அறிய
வாய்ப்பு கிடைத்து உள்ளது . இதனால் நன்மையே விளையும்" என்றார்.
இராமனை அனுப்ப தசரதன் தயக்கத்துடன் ஒப்புக் கொண்டார். இராமனும் இலக்குவனும் அரசவைக்கு வந்தார்கள். முனிவர் விசுவாமித்திரரின் திருவடிகளை வணங்கினார்கள் . அவர்களைப் பார்த்து தசரதன் '' முனிவரின் சொற்படி நடந்து கொள்ளுங்கள்" என்றார். இளவரசர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு விசுவாமித்திரர் புறப்பட்டார்.
மஹரிஷியும் . இராமனும் இலட்சுமணனும் முதல் இரவைச் சரயு நதிக்கரை ஓரத்தில் கழித்தனர். அப்பொழுது இளைஞர்கள் இருவரும் பலம் . அதிபலம் என்னும் இரண்டு மந்திரங்கள் உபதேசிக்கப்பட்டன.
இந்த மந்திரங்கள் ஜபிப்பதன் வாயிலாக மானுடன் ஆயாசத்தையும் . பசியையும் . தாகத்தையும் சிரமமின்றிச் சமாளிக்க முடியும் . குருவை அணுகியதன் விளைவாக இவர்கள் பெற்ற முதல் பேறு இதுவாகும்.
போகும் வழியில் குருவும் சிஷ்யர்களும் காமாஸ்ரமத்தை எட்டினர். இங்குதான் சிவனார் மன்மத தகனம் செய்தார் என்பது ஐதீகம்.மன்மத தகனத்தின் வாயிலாகக் காமம் அழிக்கப்பட்டதால் இந்த இடத்துக்குக் காமாஸ்ரமம் என்று பெயர் வந்தது. இங்கு இவர்கள் மூவரும்ஓர் இரவு தங்கியிருந்தனர்.
அடுத்தபடியாகக் குருவும் . சிஷ்யர்களிருவரும் அடர்ந்த அடவி ஒன்றைக் கடந்து போக நேர்ந்தது. அந்த அடவியில் தான் தாடகையும். அவளுடைய தனயன் மாரீசனும் வசித்து வந்தனர். அவர்கள் அசாதாரணமான வலுவு படைத்த பயங்கரமான அரக்கப் பிரகிருதிகள் ஆவர்.விரும்பிய மாத்திரத்தில் வேண்டியவாறு வடிவங்களை மாற்றிக் கொள்வது அவர்களுக்குச் சாத்தியமாயிற்று. மானுடர்களைச் சித்திரவதை செய்வதிலும் . மானுட மாமிசத்தைப் புசிப்பதிலும் அவர்கள் மகிழ்வு மிகக் கொண்டிருந்தனர்.
''இராமா! கொடிய அரக்கி தாடகை என்பவள் இங்கே இருக்கிறார்கள் . மாயங்களில் வல்லவர்களாகிய மாரீசனும் சுபாகுவும் அவளின் மகன்கள்.
அவர்கள் செய்யும் கொடுமைகளுக்கு அளவே இல்லை. எங்கள் வேள்வியில் இறைச்சியையும் குருதியையும் கொட்டுகிறார்கள். வேள்வி செய்பவர்களை அடித்து விரட்டுகிறார்கள். அரக்கி தாடகையை உன்னால்தான் கொல்ல முடியும். அதற்காகவே உன்னை அழைத்து வந்தேன்" என்றார் முனிவர்.
'' தங்கள் கட்டளை எதுவானாலும் நிறைவேற்றுவேன் " என்றான் இராமன். இராமனும் குரு ஆணையை நிறைவேற்றத் தொடங்கினான். தன்னுடைய வில்லுக்கு நாண் ஏற்றி அதில் அவன் ஓசையைக் கிளம்பினான். இந்த ஓசையைக் கேட்ட மாத்திரத்திலே வனத்தில் வசித்து வந்த உயிர்வகைகள் மருண்டு போய் நாலா பக்கமும் ஓட்டம் பிடித்தான்.
தான் வசித்து வந்த குகையினின்று தாடகை கோபாவேசத்துடன் கிளம்பி வந்தாள் . அறைகூவுதல் எங்கிருந்து கிளம்பிற்றோ அங்கு அவள் கர்ஜித்துக் கொண்டு வானவெளியில் பாய்ந்தாள். மானுட உருப்படிகள் மூன்று அவள் கண்ணுக்குத் தெரிந்தது.
அக்கணமே அவைகளைக் கசக்கிக் கொன்று விழுங்கிவிட அவள் தீர்மானித்தாள். அம்மூன்றும் சேர்ந்து தனக்கு நல்லதொரு நச்சுத் தீனியாகும் என்றும் எண்ணினாள். கழுகு வானத்திலிருந்து முயலின் மீது மோதுவது போன்று அம்மூவரின் மீதும் தாடகை விரைந்து பாய்ந்தாள்.
அங்ஙனம் வானத்தினின்று நிலத்தை நோக்கிச் சீறி வந்த அரக்கியை ராமபாணம் நடுவழியில் சந்தித்தது. அவளுடைய ஹிருதயத்தை அது துளைத்துக் கொண்டு போனது. அது மட்டுமல்ல . பூமியில் விழுவதற்கு முன்பே மாமிசமும் . எலும்புத் துண்டுகளும். ரத்தமும் ஒன்று சேர்க்கப்பட்ட இறைச்சி மூட்டையாகத் தடால் என்று அது தரையில் வீழ்ந்தது.
தாடகையின் கதை முடித்த இராமனைப் பாராட்டினார் விசுவாமித்திரர் வெகுவாக . மூவரின் பயணமும் தொடர்ந்தது. வழியில் போய்க் கொண்டிருந்தபொழுது விஸ்வாமித்திர முனிவர் இராமனுக்கு அஸ்தர சஸ்த்ர வித்தைகள் பல புகட்டி வந்தார்.
விஸ்வாமிர மாமுனிவருடைய வாசஸ்தலம் சித்தாஸ்ரமம் என்னும் பெயர் படைத்திருந்தது. மூர்த்திகள் மூவரும் கடைசியாக அந்த அரிய ஆஸ்ரமத்தை வந்தடைந்தனர். அங்கிருந்த முனிவர்கள் இராமனையும் இலக்குவனையும் வரவேற்றார்கள்.
'' முனிவர்களே ! மாவீரன் இராமன் கொடிய அரக்கி தாடகையைக் கொன்று விட்டான் . இனி நீங்கள் எந்த இடையூறும் இன்றி வேள்வி செய்யலாம் " என்றார் விசுவாமித்திரர்.
'' தாடகை இறந்தால் என்ன? அவள் மகன்களான மாரீசனும் சுபாகுவும் உள்ளார்களே. அவர்கள் வேள்வியை அழிப்பார்களே " என்றார்கள் முனிவர்கள் அச்சத்துடன் .
இதை கேட்ட இராமன் . ''உலகம் நலம் பெற வேள்வி செய்யுங்கள் . நானும் இலக்குவனும் காவல் இருக்கிறோம் .வேள்விக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறோம்" என்றான்.
யாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் அதிவிரைவில் நிறைவேறின. அதைப் பூர்த்தி பண்ணுவதற்கு ஆறுநாட்கள் பிடிக்கும் . அந்த ஆறு நாட்களிலும் மஹரிஷி மெளன முற்றிருத்தல் வேண்டும் . எந்த க்ஷணத்தில் வேண்டுமானாலும் ராக்ஷசர்கள் யாகசாலையின் மீது மோதுவார்கள் . ஆதலால் உணவும் உறக்கமின்றி அரசகுமாரர்கள் அல்லும் பகலும் முழுவிழிப்புடன் வேள்வியைப் பாதுகாக்க வேண்டும். அதற்கு முற்றிலும் ஆய்த்தமாக அண்ணனும் தம்பியும் காத்திருந்தனர்.
கடைசி நாளன்று வானத்தில் ஒரே கர்ஜனை. கார்மேகம் மலைமலையாக உருண்டு வருவதற்கு நிகராக அரக்கர் படை தோன்றுவாயிற்று . அப்படைக்கு மாரீசனும் சுபாகுவும் தலைமை தாங்கினர் தம்பி இலட்சுமணன் என்ன செய்ய வேண்டும் என்பதை அவனுக்குத் தெரிவித்து விட்டு மூத்தவன் மானவ அஸ்ரத்தை மாரீசன் மீது ஏவினான் .
மானவ அஸ்திரமும் தன் ஒழுங்காக நிறைவேற்றியது . தாக்க வந்தவனைத் தகர்த்துக் தள்ளுவதற்குப் பதிலாக அவன் உள்ளத்தில் குழப்பத்தைக் கிளப்பி அவனைக் கடலினுள் வெகுதூரத்துக்கப்பால் வீசியது . ஆக்னேய அஸ்திரத்தை ஏவி இராமன் சுபாகுவைச் சுட்டெரித்தான். பிறகு இரு சகோதரர்களும் ஒன்று கூடி மலைமலையாகப் புரண்டு வந்த ராக்ஷசப் படைகளைத் துடைத்துத் தள்ளினர். யாகமும் வெற்றிகரமாக முடிந்தது.
வில்லை வளைத்தால் திருமணம்
இராமனும் இலக்குவனும் விசுவாமித்ரரின் ஆஸ்ரமத்திலேயே தங்கி இருந்தார்கள் அக்காலத்தில் பிரசித்தி பெற்றிருந்த பட்டணம் ஒன்று இருந்தது. அதன் பெயர் மிதிலாபுரி . அதை ஜனக மஹராஜா ஆண்டு வந்தார். அவர் கல்வியிலும் மேன்மையுற்றிருந்தார். பண்பாட்டில் சிறந்த அவர் யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்து வந்தார்.
அத்துடன் அவரிடம் அதிசியத்தக்க வில் ஒன்று இருந்தது. பல இடங்களிலிருந்து கற்றவர்களும். மற்றவர்களும் ஆற்றல் மிக வாய்க்கப் பெற்றிருந்த அரச குமாரர்களும் அவ்விழாவில் கலந்து கொள்ள அங்கு வந்துகொண்டிருந்தனர்.
மகரிஷி விஸ்வாமித்திரரும் அவருடன் ஆஸ்மவாசிகளும் அந்த யாகத்தில் கலந்து கொள்ள செல்வதை ரகுராமனுக்கு எடுத்துரைத்தார் மஹரிஷி. விருப்பமிருந்தால் அந்த அரச குமாரர்களிருவரும் இந்த யாகத்தைப் பார்க்க வரலாம் என்று இயம்பினார்.
ஆச்சாரியர் ஆணைப்படி நடந்துகொள்ளத் தாங்கள் என்றும் ஆயத்தமாயிருப்பதை அவரிடம் இராமன் தெரிவித்தான் . பொருளைத் தொடர்ந்து நிழல் வருவதற்கு நிகராகக் குருவைப் பின்பற்றிச் சிஷ்யர்கள் செல்வதுதான் முறையென்றும் அவன் இயம்பினான். ஆஸ்ரமத்தின் திருக்கூட்டம் புறப்பட்டுச் சென்றது.
மிதிலாபுரியில் யாகம் நிகழ்வதற்காகப் பரந்த இடவசதி செய்யப்பட்டிருந்தது. அவரவர் அந்தஸ்திற்கேற்ப தங்குவதற்கான கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தன. விஸ்வாமித்திர மஹரிஷியும் அவருடைய திருக்கூட்டத்தினரும் வேள்வியில் கலந்து கொண்டனர்.
அஸ்வமேத யக்ஞம் மங்களகரமான முடிவுக்கு வந்தது. அந்த நிகழ்ச்சியின் இறுதியில் சிறுமி சீதைக்கு பொறுத்தமான வாழ்க்கைத் துணைவனைத் தேர்ந்தெடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்தச் சிறுமியை ஜனக மஹாராஜா பூமாதேவியிடமிருந்து வரப்பிரசாதமாகப் பெற்றிருந்தார்.
தெய்வீக எழில் நிறைந்திருந்த இந்தச் சிறுமிக்கேற்ற கணவனைத் தேர்ந்தெடுப்பது கடினமான காரியமாக இருந்தது. வல்லமை வாய்ந்திருந்த இளம் வேந்தனே இந்தச் சோதனையைச் சமாளிக்க முன் வர முடியும்.
சிவதனுசு ஒன்று விதேக மன்னனுக்கு வெகுமதியாக வந்து வாய்ந்திருந்தது. சாமானியமான மானுடன் யாரும் தூக்க முடியாத கனம் உடையதாக அந்த வில் இருந்தது. எந்த ராஜகுமாரன் இந்த வில்லைத் தூக்கி வளைத்து நாண் ஏற்றுகிறானோ அவனே வண்ணத்திலும் சீர்மையிலும் மதிப்புப் போட முடியாத மிதிலாபுரி மன்னனுடைய மகளை மணந்து கொள்ளத் தகுதியுடையவன் ஆவான்.
யாகத்தில் கலந்து கொள்ள வெவ்வேறு நாடுகளிலிருந்து ராஜகுமாரர்கள் பலர் வந்திருந்தார்கள் . ஆனால் அவர்களுள் யாருமே சீதையை மணந்து கொள்வதற்கேற்ற நிபந்தனையை நிறைவேற்றத் துணிந்து முன்வரவில்லை.
விஸ்வாமித்திர மஹரிஷியின் வேண்டுதலுக்கிணங்கி எடை மிக வாய்ந்திருந்த அந்தச் சிவனார் வில் ஒரு வண்டியில் இழுத்து வரப்பட்டது. வில்லின் வண்ணத்தைப் பார்த்த கூட்டம் முழுதும் திகைத்துப் போயிற்று.
இந்தச் சோதனையைச் சமாளிக்க யாரால் முடியும் என்று அரசகுமாரர்கள் திகைத்துப் போயினர். மாமுனிவரோ ஆணையிடுகிற பாங்கில் இராமனைப் பார்த்தார். கீழ்படிதலே வடிவெடுத்திருந்த சிஷ்யனாகிய இராமன் சிவதனுசு வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு ராஜ கம்பீரத்துடன் நடந்து சென்றான்.
தெய்வீகத்தில் தோய்ந்திருந்த தசரத குமாரன் லாகவமாக வில்லைப் பற்றி எடுத்தான். அக்காட்சியே மற்றவர்களைப் பரமிக்க வைத்தது. நாண் ஏற்றினான் இராமன்.
ராகவன் வில்லின் ஒரு நுனியைத் தரையில் வைத்தான். மற்ற நுனியை இருகரங்களிலும் பற்றி அமுக்கினான். வெடி வெடித்தாற்போல் வில் உடைந்தது.
சபையோர் எல்லார் உள்ளத்திலும் ஆராதனையோடு கூடிய பேருணர்வு பாய்ந்தது. இத்தகைய வீரன் ஒருவனை வையகத்தில் காண முடியுமா என்று வியந்தனர். ஜனக மஹராஜன் அடைந்த அகமகிழ்வை யாரே வருணிக்க வல்லவர்!
இவ்வரலாற்றின் செய்தியை விரைவில் செல்லக்கூடிய குதிரையாட்கள் மூலம் அயோத்தி நகருக்குச் சொல்லி அனுப்பினார்கள். தம்முடைய செல்வனாகிய இராமனுக்கு மணம் முடிப்பதற்குத் தசரதச் சக்கரவர்த்தியார் விரைவில் வரவேண்டுமென்ற அழைப்புச் சென்றது.உற்றார் உறவினர் பெரும்படை சூழ ஆரவாரத்துடன் புறப்பட்டார். மிதிலை வந்து சேர்ந்த அவரை ஜனகர் சிறப்புடன் வரவேற்றார்.
இராமனுக்கும் சீதைக்கும் திருமண நன்னாள் குறிக்கப்பட்டது. மிதிலை மாநகரே விழாக் கோலம் பூண்டது. இராமனுக்கும் சீதைக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடந்தது.பரதன் இலட்சுமணன் . சத்ருக்கனன் ஆகிய தசரதச் சக்கரவர்த்தியின் ஏனைய புதல்வர்கள் மூவருக்கும் ஜனக மஹாராஜாவினுடைய குடும்பத்தைச் சேர்ந்த ராஜகுமாரிகள் மூவர் மணந்து கொடுக்கப்பட்டனர்.
ஊர்மிளையை பெண்ணை இலக்குவனும் மாண்டவியை பரதனும் . சருதகீர்த்தியை சத்ருக்கனனும் திருமணம் செய்து கொண்டனர்.முனிவர்களும் பெரியவர்களும் மணமக்களை வாழ்த்தினார்கள் . எங்கும் மகிழ்ச்சி ஆராவாரம் எழுந்தது. ராஜகுமாரர்களை தசரதரிடம் ஒப்படைத்து விட்டு தவம் செய்யும் பொருட்டு இமயத்தை நோக்கிப் புறப்பட்டார்.
கூனி வந்தாள்
சில நாட்கள் கழிந்தன. ஜனகரிடம் விடைபெற்றார் தசரதன். தன் மகன்களுடனும் மருமகள்களுடனும் அயோத்தி புறப்பட்டார். மிதிலாபுரியிலிருந்து அயோத்யாபுரியை நோக்கித் தசரத மன்னனுடைய கூட்டம் புறப்பட்டது. இடைவெளியில் எதிர்பாராத வண்ணம் திடிரென்று விபத்து ஒன்று ஒன்று வாய்ப்பதாயிற்று. காற்று பயங்கரமாக வீசியது. பூமி நடுங்குவது போன்று தென்பட்டது.
பயங்கர மூர்த்தியாகிய பரசுராமன் திடிரென்று அயோத்தி அரச கூட்டத்தின் எதிரே தென்பட்டார். க்ஷத்திரியர்களைத் துடைத்துத் தள்ளுவது அவருடைய வாழ்க்கைச் செயல்.
அவருடைய தந்தையாகிய ஜமதக்னி என்னும் ரிஷி அரசன் ஒருவனால் கொல்லப்பட்டார். அச்செயலுக்குப் பழிவாங்குதற் பொருட்டு க்ஷத்திரிய குலத்தையே ஒதுக்கித் தள்ளப் பரசுராமன் விரதம் பூண்டிருந்தார்.
பயங்கர மூர்த்தியாகிய பரசுராமனோ தசரதனைக் கண்ணெடுத்துப் பார்க்கவில்லை. அரசர் கூட்டத்தையும் . வசிஷ்ட மஹரிஷ்யையும் ஏனைய முனிவர்களையும் அவர் மனதில் வாங்கவில்லை. தசரத ராமன் ஒருவனே அவர் நாடி வந்த உயிர்ப் பிராணியாகும்.
இராமனை நோக்கிப் பரசுராமன். ' பழமையான சிவ வில்லை உடைத்து விட்டாய். அதனால் நீ மாவீரனாக மாட்டாய். என் கையில் உள்ளது திருமாலின் வில் . இதை வளைத்துக் காட்டு பார்ப்போம்" என்று கோபத்துடன் தன் வில்லை நீட்டினார் பரசுராமர்.
இராமனுக்கு என்ன நிகழப் போகிறதோ? பரசுராமரின் கோபத்தை யாராலும் தணிக்க முடியாதே. என்ன செய்வது என்று தசரதனும் மற்றவர்களும் கலங்கினார்கள்.
எந்தத் தயக்கமுமின்றி அந்த வில்லை வாங்கினான் இராமன். அதில் அம்பு பூட்டினான். எளிதாக வளைத்தான். '' எதன் மீது இந்த அம்பை எய்ய வேண்டும்?" என்று அமைதியாக கேட்டான்.
இதை எதிர்பாராத பரசுராமர் திகைத்தார். அவர் ஆணவம் அழிந்தது. ''என் வலிமையும் தவத்தையும் எடுத்துக்கொள் " என்றார் அவர். அங்கிருந்து சென்றார்.
அயோத்தியை நோக்கி அரசகுடும்பத்தின் குடும்பம் மேலும் புறப்பட்டுச் சென்றது. அக்கூட்டத்தின் வருகையை எதிர்பார்த்திருந்த நகரவாசிகள் அந்நகரை நேர்த்தியாக அலங்கரித்தார்கள் .
அங்கே இராமனும் சீதையும் உள்ளம் ஒன்றி வாழ்ந்தார்கள். இல்லறத்தை நல்லறமாக நடத்தினார்கள். ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்திருந்தார்கள்.
கணவன் என்றால் இராமனைப் போல இருக்கவேண்டும். மனைவி என்றால் சீதையைப் போல இருக்க வேண்டும். வாழ்ந்தால் இவர்களைப் போல வாழ வேண்டும் என்று எல்லோரும் புகழ்ந்தார்கள் .
மிதிலாபுரியிலிருந்து அயோத்யாபுரிக்கு அரசர் குடும்பம் திரும்பி வந்த பிறகு தசரதச் சக்கரவர்த்திக்கு அவருடைய வயது முதிர்ந்த மாமனாராகிய கேகய நாட்டுக் கோமானிடமிருந்து வேண்டுதல் ஒன்று வந்தது.
வேண்டுதல் வேறொன்றுமில்லை. பேரனாகிய பரதன் தாத்தாவாகிய கேகய நாட்டு வேந்தரோடு கொஞ்சகாலம் வாழ்ந்திருக்க வேண்டும் என்பது ஆகும். அதனால் அந்த வயோதிகருக்குப் பரமானந்தம் உண்டாகும். தசரதச் சக்கரவர்த்தியும் அதற்கு இசைந்தார்.
பரதனையும் அவனுடன் இணைபிரியாது வாழ்ந்து வந்த சத்ருக்கனனையும் தசரதன் கொஞ்சகாலம் கேகய நாட்டில் தங்கியிருக்கும்படி அனுப்பி வைத்தார்.
தன் முதுமையை எண்ணிக் கவலைப்பட்டான் தசரதன். அரியணையில் வீற்றிருந்த அவர் அவையினரைப் பார்த்தார். ''இனியும் என்னால் அரசாட்சியைச் சுமக்க இயலாது. அராமனுக்கு முடி சூட்ட எண்ணுகிறேன். உங்கள் கருத்துக்களைத் தயங்காமல் சொல்லுங்கள்" என்று கேட்டார்.
'' அரசே! அரியணைக்கு மிகவும் பொருத்தமானவர் இராமனே. நற்பண்புகள் அனைத்தும் உடையவர். இந்தச் செய்தியை அறிந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்" என்று எல்லோரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.
அடுத்த நாளே முடி சூட்டு விழா என்று முடிவு செய்யப்பட்டது. இதை அறிந்த மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தார்கள். ஆரவாரம் செய்தபடி எங்கும் கொடிகளும் தோரணங்களும் அமைத்தார்கள்.
குதுகலத்திற்கு இருப்பிடமாயிருந்த அதே ராஜ மாளிகையில் மற்றொருபக்கம் சூழ்ச்சி ஒன்று உருவெடுத்து வந்தது. மந்தரை என்னும் பெயர் கொண்ட கூனி ஒருத்தி இருந்தாள் . கேகயச் சக்கரவர்த்தினிக்கு அவள் பணிப் பெண்ணாக இருந்தாள்.
பட்டணத்தில் எங்குத் திரும்பிப் பார்த்தாலும் ஆராவரமே தென்படுகிறதே. அதற்குக் காரணம் யாது என்று விசாரித்தாள். அடுத்தநாள் இராமனுக்குப் பட்டாபிஷேகம் என்னும் செய்தி அவள் காதுக்கு எட்டியது. அதைக் கேட்டதும் கூனி திடுக்கிட்டாள் . ஆண்டுகள் முன்னோக்கி யோசிக்கலானாள். கூனி.
முன்பு இராமன் சிறுவனாக இருந்த போது நிகழ்ச்சி இது. கைகேயின் பணிப் பெண் மந்தரை கூன் விழுந்த அவளை எல்லோரும் கூனி என்று அழைத்தார்கள். அரண்மனை வீதியில் வந்து கொண்டிருந்தாள்.
சிறுவனாக இருந்த இராமன் அவனைப் பார்த்தான். அவள் கூன் நிமிர வேண்டும் என்று நினைத்தான். விளையாட்டாக அவள் முதுகில் அம்பால் அடித்தான். அம்பால் அடித்த இராமனை பழி வாங்கும் வஞ்சம் கொண்டாள் கூனி.
விரைந்தாள் கைகேயியிடம். ''அம்மா! ஆபத்து வந்து விட்டது. இராமனுக்கு நாளை முடி சூடப் போகிறார்கள்" என்று அலறினாள்.
'' என் மகன் இராமனுக்கு முடி சூடப் போகிறார்களா? மகிழ்ச்சியான செய்திதானே. இதற்கு ஏன் அலறுகிறாய்?" என்று பூரிப்புடன் கேட்டாள் கைகேயி.
''உங்கள் மகன் பரதன் இங்கு இல்லை. உடனே இராமனுக்கு முடி சூட வேண்டிய கட்டாயம் என்ன? அவன் அரசனானால் உங்கள் நிலை என்ன ஆகும்? உங்களுக்கு என்னென்ன கெடுதிகள் வர உள்ளன? எதையாவது சிந்தித்துப் பார்த்தீர்களா? என்று கோபத்துடன் கேட்டான் கூனி.
''நீ என்ன பேசுகிறாய் ? என் நிலை என்ன ஆகும்." என்றாள் கைகேயி குழந்தைத் தனமாக.
'' இராமன் அரசனானால் எல்லா அதிகாரமும் கோசலைக்குப் போய்விடும். நீங்களும் பரதனும் அவன் கையை எதிர்பார்த்தே வாழ வேண்டும். உங்கள் எதிர்காலத்தையும் மகனின் நலத்தையும் நினைத்துப் பாருங்கள் " என்றாள் கூனி.
அதற்கு ஒப்புக் கொண்டாள் கைகேயி. முடி சூட்டு விழாச் செய்தியை கைகேயியிடம் சொல்ல வந்தார் தசரதன். அங்கே கைகேயி தலைவிரி கோலாகலமாத் தரையில் கிடந்தாள். கண்ணீர் வழிய அமுது புலம்பிக் கொண்டிருந்தாள்.
உணர்வு வரப் பெற்ற அவர். '' இராமன் உனக்கு என்ன தீங்கு செய்தான்?அவன் இல்லாமல் உனக்கு உயிர் ஏது? வேறு ஏதேனும்வரங்கள் கேள் " என்று கெஞ்சினார்.கைகேயியின் உள்ளம் சிறிதும் இளகவில்லை.''உன் மகன் வேண்டுமானால் நாடு ஆளட்டும். ஆனால் இராமன் காட்டிற்குச் செல்ல வேண்டாம் " என்று கெஞ்சினார் அவர்.
'' வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள் . நான் கேட்ட வரங்களைத் தாருங்கள் . இல்லையேல் நான் இங்கேயே உயிரை விட்டு விடுவேன் "என்று அடம் பிடித்தாள் அவள்.
நெருப்பில் விழுந்த புழுவைப் போலத் துடித்தார் தசரதன். இந்தப் பாங்கில் துயரம் நிறைந்த இரவு சிறிது சிறிதாகக் கழிந்து போயிற்று. விடியற்காலையில் சாரதியாகிய சுமந்திரன் செய்தி ஒன்று கொண்டு வந்தான்.
இராமனுடைய பட்டாபிஷேகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் முறைப்படி அமைந்திருக்கின்றனவா என்று வசிஷ்ட மஹரிஷி சொல்லியனுப்பியது அச்செய்தி ஆகும். ஆனால் பரிதாபத்திற்குறிய சக்கரவர்த்திக்கோ பேச நா எழவில்லை.
இராமனை உடனே அழைத்து வர ஆணையிட்டாள் கைகேயி சுமந்திரனிடம் . அங்கே தன் தாய் கோசலையின் திருவடிகளை வணங்கினான் இராமன்.
அங்கு வந்த சுமத்திரர் கைகேயி அழைத்த செய்தியைச் சொன்னார். தன்னை வாழ்த்தவே சிற்றன்னை அழைக்கிறார் என்று நினைத்தான் இராமன் கைகேயியின் மாளிகைக்குள் நுழைந்தான்.
மைந்தன் தந்தையார் முன்னிலையில் தோன்றி வீழ்ந்து வணங்கினான். ''இராமா! இராமா!" என்று அரசர் அலறினார். மேற்கொண்டு ஏதும் பேச இயலவில்லை அவரால். ஏதும் புரியாத இராமன். '' அம்மா! நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனா? தந்தையார் ஏன் இப்படி வருந்துகிறார்?" என்று கேட்டான்.
நடந்த எல்லாவற்றையும் அவனிடம் சொன்னாள் கைகேயி. '' உன் தந்தையாரிடம் நான் வற்புறுத்தி வேண்டுவன இரண்டு உள்ளன. மரவுரி தரித்துப் பதினான்கு வருஷகாலம் தவம் புரிவதற்காக நீ இன்றைக்கே இப்பட்டணத்தை விட்டுக் கிளம்பித் தண்டகாரண்யத்தி்ற்குப் போக வேண்டும். இது முதல் வேண்டுதல்.
நீ திரும்பி வரும் வரை பரதன் ராஜ்யத்தை ஆள வேண்டும் . இது இரண்டாவது வேண்டுதல் . இவையிரண்டும் மாற்றமுடியாத என் திட்டங்களாகும்."
கைகேயி விடுத்த ஆணையைக் கேட்டு தசரதச் சக்கரவர்த்தி நடுநடுங்கினார். இதைக் கேட்ட இராமன் சிறிதும் அதிர்ச்சி அடையவில்லை. எதுவுமே நடவாதது போல இருந்தான்.
தந்தையின் வாக்கைக் காப்பாற்றப் போகிறோம் என்று நினைத்தான். அவன் முகம் மேலும் பொலிவு பெற்றது.
'' அம்மா! நான் ஆண்டால் என்ன? என் தம்பி பரதன் ஆண்டால் என்ன? பரதன் அரசனாவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் இன்றே காட்டிற்குச் செல்கிறேன்" என்று அங்கிருந்து புறப்பட்டான்.
அண்ணனுக்கு ஆட்சி இல்லை என்பதை அறிந்தான் இலக்குவன். கோபத்தால் துடித்தான். '' என் வலிமையால் அண்ணனை அரியணையில் அமர்த்துவேன் . யார் எதிர்த்தாலும் அவர்களைக் கொன்று ஒழிப்பேன் " என்று கர்ஜனை செய்தான்.
தன் வில்லின் நானைத் தட்டினான். அவன் வில்லோசை எங்கும் கேட்டது. தம்பியின் கோபத்தை அறிந்தான் இராமன். அவனை அமைதிப்படுத்த அங்கு வந்தான்.
'' இலக்க்ஷமணா! சினம் மனிதனுக்குச் சத்துரு சீற்றம் உனது விவேகத்தை மறைத்திருக்கிறது. பெற்றோர்களிடத்து தன்னை முற்றிலும் ஒப்படைத்திருப்பவனே மைந்தன். அவர்களிடமிருந்து தனக்கென்று கேட்பதற்கு மகனுக்கு ஒன்றுமில்லை. கிடைத்தற்கு அரியாதா இந்த அரியனை? இதற்காகத் தந்தை தாயை எதிர்க்கத் துணிவதா?" என்று அறிவுரை கூறினான் இராமன்.
ஒருவழியாக இலக்குவன் அமைதியுற்றான். ''அண்ணா ! நீங்கள் இல்லாமல் நான் இங்கு இருக்க மாட்டேன். நானும் உங்களுடன் காட்டிற்கு வருகிறேன். என் வேண்டுகோளை மறுக்காதீர்" என்று வேண்டினான்.
தம்பியின் அன்பில் நெகிழ்ந்தான் இராமன். தான் மறுத்தாலும் அவன் கேட்க மாட்டான் என்பதை உணர்ந்தான். '' தம்பி! நீயும் என்னுடன் காட்டிற்கு வா" என்றான்.
மக்களின் துயரம்
தாய் கோசலையிடம் வந்தான் இராமன். அவளை வணங்கினான். மகிழ்ச்சிப் பெருக்கில் இருந்த அவள் '' மகனே! இன்று முடி சூட்டு விழா அல்லவா! நீ அரியணையில் அமர்வதைக் காணப் போகிறேன். அதைவிட எனக்கு என்ன பேறு உள்ளது" என்று அவனை வாழ்த்தினாள்.
''அம்மா! பரதன் நாடாள வேண்டும். நான் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ வேண்டும். தந்தையின் கட்டளை இது" என்றான் இராமன்.
'' அம்மா ! பரதன் நாடாள வேண்டும். நான் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ வேண்டும். நான் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ வேண்டும். தந்தையின் கட்டளை இது" என்றான் இராமன்.
அதிர்ச்சி அடைந்த அவள் '' மகனே! என்ன கொடுமை இது. நீ இல்லாமல் நான் இங்கே இருக்க மாட்டேன். நானும் உன்னுடன் காட்டிற்கு வருகிறேன்" என்றாள்.
தாயை நோக்கி இராமன். '' சத்தியத்தை ஒரு நாளும் புறக்கணிக்கலாகாது. என்னை விட்டுப் பிரிந்திருப்பது தந்தைக்குப் பெரிய வருத்தத்தை
உண்டு பண்ணும். ஆகையால் அம்மா நீங்கள் இங்கேயே தங்கியிருங்கள். நீங்கள் தந்தையார்க்கு ஆறுதல் சொல்லி அவருடன் இருப்பதே நல்லது"என்றான் இராமன்.